Sunday, 8 December 2024

தமிழ் இலக்கணம் (வேற்றுமையின் வகைகள் 4,5,6,7,8)

வேற்றுமையின் வகைகள்

முன்னுரை:


          முந்தைய பதிவில் வேற்றுமை, வேற்றுமையின்  உருபுகள், முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை பற்றி விரிவாக அறிந்து கொண்டோம். மீதமுள்ள வேற்றுமையின் வகைகளை கீழே காணலாம்.


நான்காம் வேற்றுமை:


          நான்காம் வேற்றுமைக்கு உரிய உருபு கு என்பதாகும். இது,

                ★கொடை,  

                ★பகை,

                ★நட்பு, 

                ★தகுதி,

                ★அதுவாதல்,

                ★பொருட்டு,

                ★முறை, 

                ★எல்லை.

எனப் பல பொருள்களில் வரும்.

 (எடுத்துக்காட்டு)

 கொடை         -      முல்லைக்குத் தேர் 

                                 கொடுத்தான்.

 பகை              -       புகை மனிதனுக்கு பகை 

 நட்பு                -       கபிலருக்கு நண்பர் பரணர்.

 தகுதி             -       கவிதைக்கு அழகு கற்பனை.

 அதுவாதல்   -       தயிருக்குப் பால்

                                  வாங்கினான்

 பொருட்டு    -        தமிழ் வளர்ச்சிக்குப்

                                  பாடுபட்டார்.

 முறை           -        செங்குட்டுவனுக்கு தம்பி

                                 இளங்கோ

 எல்லை         -       தமிழ்நாட்டுக்கு கிழக்கு

                                 வங்கக்கடல்.
 
            நான்காம் வேற்றுமை உறுப்புடன் கூடுதலாக ஆக என்னும் அசை சேர்ந்து வருவதும் உண்டு.

 எடுத்துக்காட்டு: 

                           கூலிக்காக வேலை 

 ஐந்தாம் வேற்றுமை :

            இன், இல் ஆகியவை ஐந்தாம் வேற்றுமை உருபுகள் ஆகும். இவை,
               
             ★ நீங்கல்

             ★  ஒப்பு 

             ★  எல்லை 

              ★  ஏது

 போன்ற பொருட்களில் வரும்.

 (எடுத்துக்காட்டு)

    நீங்கல்     -    தலையின் இழிந்த மயிர்.

    ஒப்பு          -    பாம்பின் நிறம் ஒரு குட்டி.

     எல்லை   -     தமிழ்நாட்டின் கிழக்கு

                              வங்கக்கடல்.

      ஏது           -     சிலேடை பாடுவதில்

                             வல்லவர் காளமேகம்.

 ஆறாம் வேற்றுமை :

        அது, ஆது, அ ஆகியவை ஆறாம் வேற்றுமை உருபுகள் ஆகும். இவ்வேற்றுமை உரிமைப்பொருளில் வரும். உரிமை பொருளை கிழமைப் பொருள் என்றும் கூறுவர்.
 
 (எடுத்துக்காட்டு)

         இராமனது வில்,

         நண்பனது கை.

         அது, அ ஆகிய உருபுகளை இக்காலத்தில் பயன்படுத்துவது இல்லை.

 ஏழாம் வேற்றுமை:

       ஏழாம் வேற்றுமைக்கு உரிய உருபு கண். மேல்,கீழ்,கால்,இல்,இடம் போன்ற உருபுகளும் உண்டு.
             இடம், காலம் ஆகியவற்றை குறிக்கும் சொற்களில் ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெறும்.

 (எடுத்துக்காட்டு)

            எங்கள் ஊரின்கண் மழை பெய்தது.

            இரவின்கண் மழை பெய்தது.

 குறிப்பு: இல் என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் உண்டு. நீங்கள் பொருளில் வந்தால் ஐந்தாம் வேற்றுமை என்றும் இடப்பொருளில் வந்தால் ஏழாம் வேற்றுமை என்றும் கொள்ள வேண்டும்.

 எட்டாம் வேற்றுமை:

            இது விளிப்பொருளில் வரும் படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதையே விளி வேற்றுமை என்கிறோம். 
          
             இவ்வேற்றுமைக்கு என்று தனியே உருபு கிடையாது பெயர்கள் திரிந்து வழங்குவது உண்டு அண்ணன் என்பதை அண்ணா என்றும் புலவர் என்பதை புலவரே என்றும் மாற்றி வழங்குவது எட்டாம் வேற்றுமை ஆகும்.

 (எடுத்துக்காட்டு)

                கண்ணா வா!





 மீண்டும் 

             அடுத்த 
         
                      பதிவில்........

                               🙏  சந்திப்போம்🙏



No comments:

Post a Comment

புதிய ஆத்திச்சூடி ( பாரதியார்)

புதிய ஆத்திச்சூடி - பாரதியார் ******************************************   காப்பு  -  பரம்பொருள்  வாழ்த்து:          " ஆத்திசூடி இளம்பி...