கலையின் சிறப்பு:
கலைகள் மிகவும் ஆற்றல் உடையவை. அவற்றின் சிறப்பு அளவிட்டுக் காண்பதற்கு அரியது.
அவை உலகவியல்பையும் மனித உள்ளத்தின் இயல்பையும் வெளிப்படுத்திக் காட்டுகின்றன.
ஒவ்வொரு மனித உள்ளமும் தனி ஒரு உலகமாக விளங்குகிறது.
கலைஞனின் உள்ளத்தில் விளங்கும் உலகத்தை கலைகள் புலப்படுத்திக் காட்டுகின்றன.
கவி ரவீந்திரநாத் தாகூர் கூறுவது போல் கலையின் வாயிலாக மனிதன் வெளிப்படுத்திக் கொள்வது தன் செய்திகளையோ நோக்கங்களையோ அல்ல;
மனிதன் கலைகளின் வழியாகத் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்கிறான்.
கலைஞரின் மன எண்ணங்கள் உருவாக்கிய உலகம் கலைகளின் வாயிலாக வெளியிடப்படுகிறது. கலைகளின் புலப்பாடாக
★ மனிதனின் நாகரிகம்,
★ பண்பாடு,
★ வாழ்க்கை முறை,
★ சமூக அமைப்பு,
★ சமுதாய உணர்வு,
★ சமய கோட்பாடு,
★ பழக்கவழக்கங்கள்,
★ நம்பிக்கைகள்,
★ சீர்திருத்தங்கள்,
★ சிந்தனைகள்
அனைத்தும் வெளிப்படுகின்றன.
சிறப்புடைய கலைகளை உன்னதமான அமைப்பில் உருவாக்காத எந்த நாடும் உயர்ந்து வளர்வது இல்லை. அத்தகைய நாடுகளுக்கு வரலாற்றில் உயர்வான இடம் தரப்படுவது இல்லை.
வெள்ளப் பெருக்கினை போன்று கலை பெருக்கம் இருக்கும் நாடே முன்னேற்றம் அடைந்த நாடு.
கவின் கலைகள் இல்லையெனில் அந்த நாட்டில் உயிர்ப்பும் உணர்ச்சியும் இல்லை என்றுதான் பொருள்.
கலை மனித வாழ்வின் சிறப்பான வளர்ச்சிக்கு உயிரோட்டமாக உள்ளது.
கலையை அனுபவிப்பதில்தான் அதன் சிறப்பு அடங்கியிருக்கிறது. கலைப் பயனை துய்க்கத் தெரியாதவர்களிடம் கலைகள் பயனற்று பாழாகிவிடும்.
கலைஞன் அழகை அனுபவிக்கிறான். அந்த அனுபவத்தை பிறரிடம் பங்கிட்டு மகிழ்வதில்தான் கலையின் சிறப்பு அடங்கியிருக்கிறது.
அனுபவிக்காத கலை பயனற்ற தேக்கமாகவே அமையும். மக்கள் கலையை நன்கு அனுபவித்து மகிழ்வதில்தான் அதன் ஆக்கமும் வெற்றியும் அடங்கியிருக்கிறது.
கலைகள் ஒரே மாதிரியாக அமைந்து விடுவதை சிறப்பாக கருத முடியாது .அது நாளும் நாளும் வளர வேண்டும். சீர்பட வேண்டும்.
கட்டிடம் கட்டுவது ஒரு கலைதான் ஆனால் ஒரே அமைப்பில் மாற்றம் ஏதும் இன்றி அமைவதை கலையாக கருத முடியாது.
தூக்கணாங்குருவி மிக அழகான அமைப்பில் கூடு கட்டினாலும் அதை கலையாக கருத முடியாது. அது ஓர் இயல்பாகவே கருதப்படும்.
மனிதன் கட்டிடம் அமைப்பதில் மாற்றம் காட்டுகிறான். தோற்ற பொலிவைக் காட்டுகிறான்.
வாழ்க்கை அமைப்புகளும் வசதிகளும் மாறுவதற்குத் தக்கவாறு கட்டிட அமைப்பு முறைகளை மாற்றியும், வேண்டிய வசதிகளை அமைத்தும் காட்டுகிறான். அந்த அமைப்பில் தன் திறமையால் கலைத் தன்மைகளைக் காட்டுகிறான். அது கலையாகி விடுகிறது.
கலையின் சிறப்பு அதைச் சுவைத்து மகிழ்வதிலும் பிறருடன் அனுபவிப்பதிலும் முக்கியமாக அடங்கி இருக்கிறது.மாற்றமும் தோற்றமும் கலைக்கு உயிரையும் உணர்வையும் கொடுக்கிறது.
கலைகளே மனிதனின் உயர்தனிச் சிறப்புக்கு உரைகல்லாக அமைகின்றன. கலையின் சிறப்பு கணக்கில் அடங்காது.
மீண்டும்
அடுத்த
பதிவில்..........
நன்றி!