Showing posts with label தமிழ் இலக்கணம் (எச்சம்). Show all posts
Showing posts with label தமிழ் இலக்கணம் (எச்சம்). Show all posts

Saturday, 19 October 2024

தமிழ் இலக்கணம் (முந்தைய பதிவில் சொற்றொடரின் வகைகளை பற்றி தெளிவாக அறிந்து கொண்ட நிலையில் ,இப்பகுதியில் எச்சம் பற்றிய விளக்கத்தையும் அதன் வகைகளையும் தெளிவாக கற்றுக் கொள்ளலாம்.)

                          
எச்சம்

முன்னுரை:

           படித்தான், 

           படித்த, 

           படித்து 


        ஆகிய சொற்களை கவனியுங்கள்.


       படித்தான் என்னும் சொல்லில் பொருள் முற்றுப்பெறுகிறது


       எனவே, இது வினைமுற்று ஆகும்.


        படித்த, படித்து ஆகிய சொற்களில் பொருள் முற்று பெறவில்லை


        இவ்வாறு பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது,


             1. பெயரெச்சம், 


             2.வினையெச்சம் 


என்று இரண்டு வகைப்படும்.


பெயரெச்சம்
 


     படித்த என்னும் சொல்      மாணவன், மாணவி, பள்ளி, புத்தகம், ஆண்டு போன்ற பெயர் சொற்களுள் ஒன்றைக் கொண்டு முடியும்.


(எ.கா)


     ★  படித்த மாணவன் 

     ★  படித்த பள்ளி


       இவ்வாறு பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும்.


       பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்.


(எ.கா)

பாடிய  பாடல்   - இறந்தகாலப்

                                 பெயரெச்சம் 

பாடுகின்ற 

     பாடல்            - நிகழ்காலப்

                                பெயரெச்சம் 

பாடும் பாடல் -  எதிர்காலப்

                                பெயரெச்சம்


தெரிநிலை பெயரெச்சம்: 

          செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம் எனப்படும்.

 (எ.கா)

        எழுதிய கடிதம்


       இத்தொடரில் உள்ள எழுதிய என்னும் சொல் எழுதுதல் எனும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாக காட்டுகிறது.


குறிப்புப் பெயரெச்சம்:

          செயலையோ காலத்தையோ தெளிவாக காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் பெயரெச்சம் குறிப்பு பெயரெச்சம் எனப்படும்.


(எ.கா)


       சிறிய கடிதம்


       இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல்லின் செயலையோ, காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறிய முடிகிறது.


வினையெச்சம் 


       வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும். 


(எ.கா)


           படித்து முடித்தான் 

           படித்து வியந்தான்


        படித்து என்னும் சொல் முடித்தான் ,வியந்தாள், மகிழ்ந்தார் போன்ற வினைச்சொற்களுள் ஒன்றைக் கொண்டு முடியும்.


தெரிநிலை வினையெச்சம்: 


        செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.


(எ.கா)


        எழுதி வந்தான்.


        இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாக காட்டுகிறது.


குறிப்பு வினையெச்சம்: 


         காலத்தை வெளிப்படையாக காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் குறிப்பு வினையெச்சம் எனப்படும். 


(எ.கா)


           மெல்ல வந்தான்.


           இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாக காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது.


முற்றெச்சம் 


         ஒரு வினைமுற்று எச்ச பொருள் தந்து மற்றொரு வினைமுற்றை கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும். 


(எ.கா)


       வள்ளி படித்தனள்.


        இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்தாள் என்னும் வினைமுற்றுப் பொருளைத் தருகிறது.


(எ.கா)


      வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.


        இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. 




மீண்டும் 

         அடுத்த 

                   பதிவில்……

                                       நன்றி!

                                                  

                               👀👀



புதிய ஆத்திச்சூடி ( பாரதியார்)

புதிய ஆத்திச்சூடி - பாரதியார் ******************************************   காப்பு  -  பரம்பொருள்  வாழ்த்து:          " ஆத்திசூடி இளம்பி...