Wednesday, 18 June 2025

தமிழர் இசை (கலையின் தன்மை)

கலையின் தன்மை :

 

        மனித மனம் அழகுணர்ச்சி உடையது. இனியதை விரும்புவது. உலக அனுபவங்களை கொண்டு மனிதன் விரும்புவதை நன்கு உணர்ந்து தன்னுடைய அறிவின் திறத்தால் அழகானவற்றை சிறப்பாகப் படைத்துப் பிறர் வியக்கும் வண்ணம் செய்வது கலையின் அடிப்படையாகும். அது இன்பம் அளிப்பதற்கு உரியதாகவும் அமைவதாயின் சிறந்த கலையாக அனைவராலும் மதிக்கப்படும். 


            கலை மனித சாதனைகளில் உயர்வானதாக கருதப்படுவது. மனித நாகரீகத்தின் சிறப்பை கலைகளைக் கொண்டு அறியலாம் பண்பாட்டுத் தன்மை கலைகளால் உணரப்படும்.


           கலை மக்களை கவர்ந்து அவர்களுடைய அழகுணர்ச்சிக்கு அருமையான விருந்து படைக்கும். கலைச் சிறப்பில்லாத காலகட்டம் மனித வாழ்வின் மங்கிய வரலாறாகவே கருதப்படும். 


         சிந்தனையின் முகிழ்ப்பில் தோன்றிப் படைப்புத்திறனால் உருப்பெற்று இன்ப உணர்வுக்கு காரணமாகி அழகு தன்மையுடன் விளங்கும் கலை அனைவராலும் சிறப்பிக்கப்படுகிறது. 


         கலையின் மேன்மை மனித மனத்தை கவர்ந்து சுவையூட்டுவதில் தான் இருக்கிறது. கலைகள் வளர்வது மனிதனின் முன்னேற்றத்தை காட்டுவதாகும்.


            மக்கள் முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் விரும்பும் இயல்புடையவர்கள். அந்த இயல்புக்குத் தக்கவாறு அவர்கள் உருவாக்கும் கலைகள் முன்னேற்றங்களுடன் மாற்றமடைவதை விரும்புகிறார்கள்.


         கலையின் பழமை பெருமையுடன் காக்கப்படும். ஆயினும் அதில் புதுமைகள் புகுத்தப்படுவது விரும்பி வரவேற்கப்படும். கலையின் புதுமையில் இயல்புத் தன்மைகள் அமையாவிட்டால் அது சுவையில் குன்றிச் சீர்மையற்றதாக கருதப்படும்.


         கலையைப் பற்றி விளக்கம் தரும் டி.வி. நாராயணசாமி கலை என்பது மக்களது வாழ்வியலை பண்பாட்டை நாகரீகத்தை எடுத்துக்காட்டும் கண்ணாடி என்று எடுத்துக்காட்டுகிறார்.


       மக்கள் வாழ, வளரச் சமுதாய நீதிகளையும் அறத் தத்துவங்களையும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டிட, கலையைப் போல் வேறு சாதனம் இல்லை என்றும் கூறுகிறார்.


         கலைகள் மக்களின் வாழ்வைக்கொண்டு அமைக்கப்படுபவை. வாழ்வியல் கூறுகளை எடுத்துக்காட்டும் தன்மை உடையவை.   அதில் தவறுகள் சுட்டப்படும் திருத்தங்கள் காட்டப்படும்.சமூக உண்மைகள் உரைக்கப்படும் .


        நீதி, நியாயம், அறம், மறம் அனைத்தும் கலைத்தன்மையுடன் கவின் அழகு விளங்க நன்மை நாட்டமாக உள்ளதைக் கவர்ந்து உணர்ச்சியை ஊட்டும் தரமாக காட்டப்படும். 


        இத்தகைய உணர்வுக் கலப்பான கலைகளே வாழும் இயல்பு கொண்டவை. நிலையான கருத்துக்களை முறையாக காட்டும் தன்மையுடையவைதான், என்றும் நிலைத்து வாழும் நல்ல கலைகள். சமுதாய உணர்வற்ற கலைகள் பயனற்ற பொழுது போக்குகள் ஆகும்.

       

  சமயங்கள் சமுதாயத்தின் ஒரு பகுதியாக அமைகின்றன. அவற்றை வளர்க்க அரிய கலைகள் உரிய முறையில் பயன்படுத்தப் பெற்றுள்ளன . உலக நாடுகளில் எல்லாம்,    உன்னதமான கலைகளைச் சமயங்களே சிறப்பாக ஊட்டி வளர்த்துள்ளன.


           அருள் நிலையில் அரியவற்றை சாதிப்பது போல் பொருளுடைய கலைகளை அருளுடைய சமயங்கள் நலமாக பேணி தங்கள் நினைப்புக்கு தக்கவாறு அமைத்து ஊக்கமுடன் வளர்த்து வந்துள்ளன.  


         சமயம் நலங்காணச் சார்புடைய கலைகள் நன்கு உதவியுள்ளன. தமிழ்நாட்டு கலைகளை பெரும்பாலும் சமயங்களே தாயாகித் தாலாட்டி வளர்த்துள்ள நிலையைக் காணலாம். கலைகள் மனித உணர்வில் மாற்றங்களையும் ஏற்றங்களையும் கொடுக்கும் ஆற்றலுடையவை.


       விரும்பத்தக்கதாக உள்ளது எதுவோ அதுவே கலை. நலமானதாக உள்ளது எதுவோ அதுவே கலை. உள்ளத்தை ஈர்ப்பதாக உள்ளது எதுவோ அதுவே கலை.


         காண்பார் உள்ளத்தை ஈர்க்கும் ஆற்றலே கலை ஆற்றல். ஒன்றினைக் காண்பார் உள்ளத்தை ஒன்றினோடு ஈடுபாடு கொள்வார் உள்ளத்தை ஈர்க்கும் தன்மை எதுவோ அதுவே கலைத்தன்மை.


          கலை என்பதற்கு பொதுப்பட அழகு எனப் பொருள் கூறுவர் .அவ்வழகு உருவ வகையில், உறுவியக்க வகையில், ஒலிவகையில், ஒலி முறைப்பட்ட தொழில் வகையில், தொழில் முறையில் அமைவதாகும் என்று செந்துறை முத்து உணர்வான சிந்தனைக்குரிய சிறந்த விளக்கத்தை கலைக்கு உரியதாகத் தருகிறார்.


          கலை என்பது வாழ்க்கையுடன் ஒட்டி உறவாடும் தன்மை உடையது; மனித மனத்துடன் ஒன்றிப் பற்றும் ஆற்றல் உடையது; அதில் வாழ்க்கை விளங்கும்; மன எண்ணங்கள் துலங்கும்; உணர்வுகள் புலப்படும்; மனித இயல்புகள் தோன்றும்; மரபு வழி திறக்கும்; மாற்றங்கள் தெரியும்; மாண்புகள் இலங்கும்; இன்பம் கனியும்; பண்பாட்டு மேன்மையும் பழக்கவழக்கச் சீர்மையும் அறிவு விளக்கத் தன்மையும் அகத்தெழும் உணர்வின் பான்மையும் கலைகள் வாயிலாகக் கவினுற விளங்கும். 


      அழகுணர்ச்சி உடைய மனிதனால் கலைகளை உருவாக்கவும் உருவாக்கப்பெற்ற கவின் கலைகளைச் சுவைக்கவும் முடியும்.


       கலைகள் இன்றி இன்பமான பயனை இயல்பான முறையில் மனித வாழ்க்கை அனுபவிக்காது என்று கூறலாம். எத்தனை எத்தனை வகையான கலைகளை எந்த எந்த முறையில் மனிதன் உருவாக்கியுள்ளான் என்று சிந்திப்பதே ஒரு சுவையான அனுபவமாகும். 

                     

      மீண்டும் 

                      அடுத்த 

                                  பதிவில்  .........


                             நன்றி  🙏🙏🙏      

             

No comments:

Post a Comment

புதிய ஆத்திச்சூடி ( பாரதியார்)

புதிய ஆத்திச்சூடி - பாரதியார் ******************************************   காப்பு  -  பரம்பொருள்  வாழ்த்து:          " ஆத்திசூடி இளம்பி...