வேற்றுமை
முன்னுரை:பாவை அண்ணன் பார்த்து,"அண்ணன் எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்று கேட்டாள்."இந்த அண்ணன் செய்ய முடிந்த உதவி என்றால் உறுதியாகச் செய்வேன்" என்றான் அண்ணன். "என் அண்ணன் உள்ளம் எனக்குத் தெரியும். என் அண்ணன் என் மீது மிகுந்த அன்பு உண்டு" என்றாள் பாவை.
மேலே உள்ள பகுதியைப் படித்துப் பாருங்கள். இதில் கூறப்பட்டுள்ள செய்தியை புரிந்து கொள்ள இயலாதவாறு ஒரு குழப்பம் உள்ளது அல்லவா?
இதே பகுதியைக் கீழே உள்ளவாறு படித்துப் பாருங்கள்.
பாவை அண்ணனைப் பார்த்து,"அண்ணா எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்று கேட்டாள்."இந்த அண்ணனால் செய்ய முடிந்த உதவி என்றால் உறுதியாகச் செய்வேன்" என்றான் அண்ணன். "என் அண்ணனது உள்ளம் எனக்குத் தெரியும். என் அண்ணனுக்கு என் மீது மிகுந்த அன்பு உண்டு" என்றாள் பாவை.
இப்போது எளிதாகப் பொருள் புரிகிறது அல்லவா?
இரண்டாம் பகுதியில் அண்ணன் என்னும் பெயர்ச்சொல்
★ அண்ணனை,
★ அண்ணா,
★ அண்ணனால்,
★ அண்ணனுக்கு
என்றெல்லாம் மாற்றப்பட்டிருப்பதால் பொருள் தெளிவாக விளங்குகிறது.
வேற்றுமை உருபுகள்:
அண்ணன் என்னும் பெயர்ச்சொல்லுடன் ஐ, ஆல், கு, இன், அது போன்ற அசைகள் இணைந்து அச்சொல்லின் பொருளை பல்வேறு வகையாக வேறுபடுத்துகின்றன.
இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை வேற்றுமை என்பர்.
இதற்காக பெயர் சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை வேற்றுமை உருபுகள் என்று கூறுவர்.
வேற்றுமையின் வகைகள்:
வேற்றுமை எட்டு வகைப்படும். அவை,
1. முதல் வேற்றுமை
2. இரண்டாம் வேற்றுமை
3. மூன்றாம் வேற்றுமை
4. நான்காம் வேற்றுமை
5. ஐந்தாம் வேற்றுமை
6. ஆறாம் வேற்றுமை
7. ஏழாம் வேற்றுமை
8. எட்டாம் வேற்றுமை
ஆகியனவாகும்.
முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை.
இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை முடிய உள்ள ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உண்டு.
முதல் வேற்றுமை:
பெரும்பாலான சொற்றொடர்களில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகிய மூன்று உறுப்புகள் இடம் பெற்றிருக்கும்.
எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளை தருவது முதல் வேற்றுமை ஆகும். முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்றும் குறிப்பிடுவர்.
( எடுத்துக்காட்டு)
பாவை வந்தாள்.
இரண்டாம் வேற்றுமை:
இரண்டாம் வேற்றுமை உருபு ஐ என்பதாகும்.
கபிலர் பரனரைப் புகழ்ந்தார்.
கபிலரை பரணர் புகழ்ந்தார்.
இவ்விரு தொடர்களையும் கவனியுங்கள் இரண்டாம் வேற்றுமை உருபு ஐ எந்த பெயருடன் இணைக்கிறதோ அப்பெயர் செயப்படும் பொருளாக மாறிவிடுகிறது.
இவ்வாறு ஒரு பெயரை செயப்படுபொருளாக வேறுபடுத்தி காட்டுவதால் இரண்டாம் வேற்றுமையை செயப்படு பொருள் வேற்றுமை என்றும் கூறுவர்.
இரண்டாம் வேற்றுமை
★ ஆக்கல்
★ அழித்தல்
★ அடைதல்
★ நீத்தல்
★ ஒத்தல்
★ உடைமை
ஆகிய ஆறு வகையான
பொருள்களில் வரும்.
ஆக்கல் - கரிகாலன்
கல்லணையை
கட்டினான்.
அழித்தல் - பெரியார்
மூடநம்பிக்கைகளை
ஒழித்தார்.
அடைதல் - கோவலன்
மதுரையை
அடைந்தான்.
நீட்டல். - காமராசர்
பதவியைத்
துறந்தார்.
ஒத்தல் - தமிழ் நமக்கு
உயிரைப்
போன்றது.
உடைமை - வள்ளுவர் பெரும்
புகழை உடையவர்.
மூன்றாம் வேற்றுமை:
ஆல், ஆன்,ஒடு, ஓடு ஆகிய நான்கும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் ஆகும்.
இவற்றுள் ஆல், ஆன் ஆகியவை
1.கருவிப்பொருள்,
2.கருத்தாப் பொருள்
ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும்.
கருவிப்பொருள்:
1.முதற்கருவி
2.துணைக் கருவி
என இரண்டு வகைப்படும்.
முதற்கருவி:
கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது முதற்கருவி.
( எடுத்துக்காட்டு)
மரத்தால் சிலை செய்தான்.
துணைக் கருவி:
ஒன்றை செய்வதற்கு துணையாக இருப்பது துணைக்கருவி.
( எடுத்துக்காட்டு)
உளியால் சிலை செய்தான்.
கருத்தா பொருள் :
கருத்தா பொருள்
1.ஏவுதல் கருத்தா
2. இயற்றுதல் கருத்தா
என இரு வகைப்படும்.
ஏவுதல் கருத்தா:
பிறரை செய்ய வைப்பது ஏவுதல் கருத்தா.
( எடுத்துக்காட்டு)
கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.
இயற்றுதல் கருத்தா:
தானே செய்வது இயற்றுதல் கருத்தா
( எடுத்துக்காட்டு)
சேக்கிழாரால்
பெரியபுராணம்
இயற்றப்பட்டது.
ஆன் என்னும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும்.
( எடுத்துக்காட்டு)
புறந்தூய்மை நீரான்
அமையும்.
ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.
( எடுத்துக்காட்டு)
★ தாயொடு குழந்தை சென்றது.
★ அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.
மீதமுள்ள வேற்றுமை வகைகளை அடுத்த பதிவில் தொடரலாம்.🙏🙏

