Saturday, 9 November 2024

தமிழ் இலக்கணம் (முந்தைய பதிவில் தொகைநிலைத் தொடர்களின் வகைகள் பற்றிய விளக்கத்தை தெளிவாக அறிந்து கொண்ட நிலையில் ,இன்றைய இலக்கணம் கற்பித்தல் பகுதியில் வினா வகைகள் பற்றிய விளக்கத்தையும் தெளிவாக கற்றுக் கொள்ளலாம்.)

                   வினா வகை 


முன்னுரை :

           ★ என்ன ?

           ★ எப்படி ?

           ★ எதற்கு ?

           ★ எங்கு ?

           ★  ஏன் ?

      என வினாமேல் வினாவை கேட்டு விடை அறிய விரும்புகின்றவனே சிறந்த அறிவாளியாக ஆக முடியும் என்று சாக்ரடீசும், தந்தை பெரியாரும் கூறுவர். 

வினா வகை :

         வினா ஆறு வகைப்படும். அவை,

        1. அறிவினா 

        2. அறியா வினா 

        3. ஐய வினா 

        4. கொளல் வினா 

        5. கொடை வினா 

        6. ஏவல் வினா 


1. அறிவினா:

                தான் ஒரு பொருளை நன்கு அறிந்திருந்தும் அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்பதனை அறியும் பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா.

(எ.கா)

          ★ திருக்குறளை 

                இயற்றியவர் யார்? 

          ★ சிலப்பதிகாரத்தை

                இயற்றியவர் யார்? 

     என ஆசிரியர்  மாணவரிடம் வினவுகிறார்.

          விடையை ஆசிரியர் தாம் அறிந்திருந்தும் மாணவர் அறிந்துள்ளனரா என்று அறிய வினவப்பட்டதாகலின் அறிவினா ஆகும்.


2. அறியா வினா:

           தான் அறியாத ஒரு பொருளை அறிந்து கொள்வதற்காகப் பிறரிடம் வினவுவது அறியாவினா.

(எ.கா)

           ★ எட்டுத்தொகை நூல்களுள்

               புறம் பற்றியன எவை? 


           ★ ஐயா, இச்செய்யுளின்

                பொருள் யாது?


      என மாணவர் தான் அறியாத ஒன்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வினவுவது அறியா வினை ஆகும்.


3. ஐய வினா:

          தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒரு பொருள் குறித்து, ஐயத்தினைப் போக்கிக் கொள்வதற்காக வினவப்படும் வினா, ஐயவினா.

(எ.கா)

             ★அங்கே கிடப்பது பாம்போ?

                 கயிறோ?


             ★இதனைச் செய்தவர்

                    இராமனா?

                    இலக்குமணனா?


4. கொளல் வினா:

            தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு கடைக்காரரிடம் வினவும் வினா கொளல் வினா.

(எ.கா)

          ★ வணிகரே! பருப்பு

              உள்ளதா?

  என வணிகரிடம் வினவுதல்.

         பருப்பு இருப்பின் பெற்றுக் கொள்ளும் பொருட்டு கேட்கப்பட்டது ஆதலின் கொளல் வினா ஆகும்.


5. கொடை வினா :

          தான் ஒரு பொருளைக் கொடுப்பதற்காக, அப்பொருள் இருத்தலைப்பற்றி பிறரிடம் வினவுவது,கொடை வினா.

 (எ.கா)

            ★  மாணவர்களே!

                 உங்களுக்கு சீருடை

                 இல்லையோ?

             மாணவர்களுக்கு சீருடை கொடுக்கும் பொருட்டு கேட்கப்பட்டது ஆதலின் கொடை வினா ஆகும்.


6. ஏவல் வினா:

          ஒரு தொழிலைச் செய்யும்படி ஏவும் வினா ஏவல் வினா. 

(எ.கா)

            ★மனப்பாடச் செய்யுளைப்

                 படித்தாயா? 

            ★முருகா சாப்பிட்டாயா? 

            (இவை படி, சாப்பிடு என்று ஏவல் பொருளைத் தருகின்றன.) 


       அறிவு, அறியாமை, ஐயுறல்,

                            கொளல், கொடை,

       ஏவல் தரும் வினா ஆறும்

                                              இழுக்கார் 

                                                     - நன்னூல் 385

மீண்டும் 

       அடுத்த 

             பதிவில்,,.......🙏




No comments:

Post a Comment

புதிய ஆத்திச்சூடி ( பாரதியார்)

புதிய ஆத்திச்சூடி - பாரதியார் ******************************************   காப்பு  -  பரம்பொருள்  வாழ்த்து:          " ஆத்திசூடி இளம்பி...