Sunday, 24 November 2024

தமிழ் இலக்கணம் ( வேற்றுமை, வேற்றுமை உருபுகள், அதன் வகைகள்1,2,3)

 வேற்றுமை 

முன்னுரை:


             பாவை அண்ணன் பார்த்து,"அண்ணன் எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்று கேட்டாள்."இந்த அண்ணன் செய்ய முடிந்த உதவி என்றால் உறுதியாகச் செய்வேன்" என்றான் அண்ணன். "என் அண்ணன் உள்ளம் எனக்குத் தெரியும். என் அண்ணன் என் மீது மிகுந்த அன்பு உண்டு" என்றாள் பாவை.


            மேலே உள்ள பகுதியைப் படித்துப் பாருங்கள். இதில் கூறப்பட்டுள்ள செய்தியை புரிந்து கொள்ள இயலாதவாறு ஒரு குழப்பம் உள்ளது அல்லவா?


             இதே பகுதியைக் கீழே உள்ளவாறு படித்துப் பாருங்கள்.

              

          பாவை அண்ணனைப் பார்த்து,"அண்ணா எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்று கேட்டாள்."இந்த அண்ணனால் செய்ய முடிந்த உதவி என்றால் உறுதியாகச் செய்வேன்" என்றான் அண்ணன். "என் அண்ணனது உள்ளம் எனக்குத் தெரியும். என் அண்ணனுக்கு என் மீது மிகுந்த அன்பு உண்டு" என்றாள் பாவை.


               இப்போது எளிதாகப் பொருள் புரிகிறது அல்லவா?

         

             இரண்டாம் பகுதியில் அண்ணன் என்னும் பெயர்ச்சொல்


     ★ அண்ணனை, 

     ★ அண்ணா, 

     ★ அண்ணனால்,    

     ★ அண்ணனுக்கு


         என்றெல்லாம் மாற்றப்பட்டிருப்பதால் பொருள் தெளிவாக விளங்குகிறது.


வேற்றுமை உருபுகள்: 


             அண்ணன் என்னும் பெயர்ச்சொல்லுடன் ஐ, ஆல், கு, இன், அது போன்ற அசைகள் இணைந்து அச்சொல்லின் பொருளை பல்வேறு வகையாக வேறுபடுத்துகின்றன.


            இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை வேற்றுமை என்பர்.


            இதற்காக பெயர் சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை வேற்றுமை உருபுகள் என்று கூறுவர். 


வேற்றுமையின் வகைகள்: 


            வேற்றுமை எட்டு வகைப்படும்.  அவை,


        1. முதல் வேற்றுமை 

        2. இரண்டாம் வேற்றுமை

        3. மூன்றாம் வேற்றுமை

        4. நான்காம் வேற்றுமை

        5. ஐந்தாம் வேற்றுமை

        6. ஆறாம் வேற்றுமை 

        7. ஏழாம் வேற்றுமை 

        8. எட்டாம் வேற்றுமை

ஆகியனவாகும்.


        முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை.


        இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம்  வேற்றுமை  முடிய உள்ள ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உண்டு.


முதல் வேற்றுமை: 


       பெரும்பாலான சொற்றொடர்களில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகிய மூன்று உறுப்புகள் இடம் பெற்றிருக்கும். 


         எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளை தருவது முதல் வேற்றுமை ஆகும். முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்றும் குறிப்பிடுவர்.


 ( எடுத்துக்காட்டு)


             பாவை வந்தாள்.


இரண்டாம் வேற்றுமை:


          இரண்டாம் வேற்றுமை உருபு என்பதாகும்.


      கபிலர் பரனரைப் புகழ்ந்தார்.

      கபிலரை பரணர் புகழ்ந்தார்.


      இவ்விரு தொடர்களையும் கவனியுங்கள் இரண்டாம் வேற்றுமை உருபு எந்த பெயருடன் இணைக்கிறதோ அப்பெயர் செயப்படும் பொருளாக மாறிவிடுகிறது.


       இவ்வாறு ஒரு பெயரை செயப்படுபொருளாக வேறுபடுத்தி காட்டுவதால் இரண்டாம் வேற்றுமையை செயப்படு பொருள் வேற்றுமை என்றும் கூறுவர்.


        இரண்டாம் வேற்றுமை 

       ★  ஆக்கல் 

       ★  அழித்தல் 

       ★  அடைதல் 

       ★   நீத்தல் 

       ★   ஒத்தல் 

       ★   உடைமை 

       ஆகிய ஆறு வகையான

பொருள்களில் வரும்.


ஆக்கல்     -     கரிகாலன்

                            கல்லணையை

                            கட்டினான்.


 அழித்தல் -    பெரியார்

                        மூடநம்பிக்கைகளை

                            ஒழித்தார்.


 அடைதல் -    கோவலன்

                           மதுரையை

                           அடைந்தான்.


நீட்டல்.       -     காமராசர்

                            பதவியைத்

                            துறந்தார். 


ஒத்தல்     -      தமிழ் நமக்கு

                            உயிரைப்  

                            போன்றது.


 உடைமை  -    வள்ளுவர் பெரும்

                             புகழை உடையவர்.


மூன்றாம் வேற்றுமை:


       ஆல், ஆன்,ஒடு, ஓடு ஆகிய நான்கும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் ஆகும். 


       இவற்றுள் ஆல், ஆன் ஆகியவை     


        1.கருவிப்பொருள், 

         2.கருத்தாப் பொருள் 


       ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும்.


 கருவிப்பொருள்:


        1.முதற்கருவி 

        2.துணைக் கருவி 

என இரண்டு வகைப்படும்.


முதற்கருவி:


      கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது முதற்கருவி.


( எடுத்துக்காட்டு)


       மரத்தால் சிலை செய்தான்.


துணைக் கருவி: 


        ஒன்றை செய்வதற்கு துணையாக இருப்பது துணைக்கருவி.


( எடுத்துக்காட்டு)


       உளியால் சிலை செய்தான்.


கருத்தா பொருள் :


      கருத்தா பொருள் 

       1.ஏவுதல் கருத்தா

       2. இயற்றுதல் கருத்தா

என இரு வகைப்படும்.


ஏவுதல் கருத்தா:

       பிறரை செய்ய வைப்பது ஏவுதல் கருத்தா. 


( எடுத்துக்காட்டு)


        கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.


இயற்றுதல் கருத்தா: 


         தானே செய்வது இயற்றுதல் கருத்தா


( எடுத்துக்காட்டு)


      சேக்கிழாரால்

                 பெரியபுராணம்

                            இயற்றப்பட்டது.


     ஆன் என்னும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும்.


( எடுத்துக்காட்டு)


      புறந்தூய்மை நீரான்

                அமையும்.


       ஒடு,  ஓடு  ஆகிய  மூன்றாம் வேற்றுமை  உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.


( எடுத்துக்காட்டு)


★ தாயொடு குழந்தை சென்றது.

★ அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.


மீதமுள்ள வேற்றுமை வகைகளை அடுத்த பதிவில் தொடரலாம்.🙏🙏


Sunday, 17 November 2024

தமிழ் இலக்கணம் (முந்தைய பதிவில் வினா வகைகளான அறிவினா,அறியாவினா, ஐயவினா, கொடை வினா, கொளல் வினா , ஏவல் வினா வ பற்றிய விளக்கத்தை பற்றி தெளிவாக அறிந்து கொண்ட நிலையில் ,இன்றைய இலக்கணம் கற்பித்தல் பகுதியில் விடை வகைகள் ஆன சுட்டு விடை, மறைவிடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை பற்றிய விளக்கத்தையும் தெளிவாக கற்றுக் கொள்ளலாம்.)

               விடை வகை 



முன்னுரை:


        வினவப்படும் வினாவிற்கு ஏற்ப விடை அளிப்பது தான் மொழிநடையின் சிறப்பு .

         தேர்வு நாளை நடைபெறுமா? எனக் கேட்ட ஒருவனிடம் என் தங்கை ஏழாம் வகுப்பில் படிக்கிறாள் எனக் கூறுவது தவறு. வினாவும் விடையும் பிழை இன்றி அமைதலே முறை. 


வேறு பெயர்கள்:


       இறை,செப்பு, பதில் என்பன விடையின் வேறு பெயர்கள்.


விடை வகை:


       விடை எண் (எட்டு) வகைப்படும்.அவை , 


        1.சுட்டு விடை 


        2.மறை விடை 


        3. நேர் விடை 


        4.ஏவல்  விடை 


        5.வினா எதிர்

          வினாதல் விடை 


        6.உற்றது உரைத்தல்

            விடை


        7. உறுவது கூறல்

            விடை 


        8. இனமொழி விடை 


என்பன.


1.சுட்டு விடை :


        வினவும் வினாவிற்கு சுட்டி விடை அளிப்பது சுட்டு விடை ஆகும்.

(எ.கா)

      ★  தென்காசிக்குச்

            செல்லும் வழி யாது?

      ★  சென்னைக்கு வழி

              யாது ?

        என்ற வினாவிற்கு இது  என விடை அளிப்பது சுட்டு விடை ஆகும்.


 2.மறை விடை: 


          வினவும் வினாவிற்கு எதிர்மறை பொருளில் விடை இருப்பின் மறைவிடை எனப்படும்.

(எ.கா)

         ★  இது செய்வாயா ?

            என்ற வினாவிற்கு 'செய்யேன்' என  விடையளித்தால் அது மறைவிடை எனப்படும்.


  3. நேர் விடை :


      வினவும் வினாவிற்கு உடன்பாட்டு பொருளில் விடை அளித்தால் அது நேர்விடை  ஆகும்.

(எ.கா)

            நீ நாளை பள்ளி

                   செல்வாயா?

         இவ் வினாவிற்கு செய்வேன் என்று விடையளித்தால்  அது நேர்விடை ஆகும்.


4.ஏவல்  விடை :


         வினவப்படும் வினாவிற்கு வினவியவரையே ஏவுதல் ஏவல் விடை எனப்படும்.

(எ.கா)

        ★ அங்காடிக்கு

                       செல்வாயா? 

          இவ் வினாவிற்கு நீயே செல் என்று விடையளித்தால் (வினவியவரையே ஏவுவதால்) அது ஏவல் விடை ஆகும்.


5.வினா எதிர் வினாதல் விடை :


         வினவும் வினாவிற்கு விடையாக வினாவாகவே கூறுதல் வினா எதிர் வினாதல் விடை ஆகும்.

(எ.கா)

         ★ நீ தேர்வுக்குப் 

               படித்தாயா?

        இவ்வினாவிற்கு விடையாக படிக்காமல் இருப்பேனா? என்று வினவுவது வினா எதிர் வினாதல் விடை ஆகும்.


6.உற்றது உரைத்தல் விடை:


            வினவும் வினாவிற்கு தனக்கு உற்றதை விடையாக கூறுதல் உற்றது உரைத்தல் விடை  ஆகும்.

(எ.கா)

        நீ சொற்பொழிவு

               ஆற்றுவாயா ?

         இவ் வினாவிற்கு 'தொண்டை வலிக்கிறது' என்று தனக்கு நேர்ந்ததை கூறுவது உற்றது உரைத்தல் விடை ஆகும்.


7. உறுவது கூறல் விடை :


      வினவும் வினாவிற்குத் தனக்கு நிகழப்போவதை விடையாக கூறுவது உறுவது கூறல் விடை ஆகும்.

(எ.கா)

      ★   நீ    இதைச்

           சாப்பிடுவாயா ?

        என்ற வினாவிற்கு 'வயிறு வலிக்கும்' என்று கூறுதல் உறுவது கூறல் விடை ஆகும்.


8. இனமொழி விடை :


     வினவும் வினாவிற்கு இனமான வேரூன்றை விடையாக் கூறுவது இனமொழி விடை ஆகும்.

(எ.கா)

         ★ நீ பாடுவாயா?

          இவ்வினாவிற்கு 'ஆடுவேன்' எனக் கூறுதல் பாடலுக்கு இனமான ஆடலை குறிப்பிட்டமையால்  இனமொழி விடை ஆகும்.


 முடிவுரை:


         ★ சுட்டு, 

         ★ மறை,

         ★ நேர்.

         ஆகிய மூன்றும் வெளிப்படையாக விடையைக் கூறுவது ஆகும் .

     ★ஏவல் ,

     ★வினா எதிர் வினாதல்,

     ★உற்றது உரைத்தல்,

     ★உறுவது கூறல்,

     ★இனமொழி. 

      ஆகிய ஐந்தும் வினாக்களுக்கு உரிய விடையை குறிப்பால் உணர்த்துவன ஆகும்.


"சுட்டு மறைநேர் ஏவல்  

                                         வினாதல்

 உற்ற(து) உரைத்தல்

                            உறுவது கூறல் இனமொழி எனும் என

                         இறையுள் இறுதி

 நிலவிய ஐந்துமப்

         பொருண்மையின் நேர்ப"

                            (  நன்னூல் - 386 )

மீண்டும் 

           அடுத்த 

                        பதிவில்.........🙏


👆This Content Sponsored By👇


"This Content Sponsored by Genreviews.Online


Genreviews.online is One of the Review Portal Site


Website Link: https://genreviews.online/


Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"





   


Saturday, 9 November 2024

தமிழ் இலக்கணம் (முந்தைய பதிவில் தொகைநிலைத் தொடர்களின் வகைகள் பற்றிய விளக்கத்தை தெளிவாக அறிந்து கொண்ட நிலையில் ,இன்றைய இலக்கணம் கற்பித்தல் பகுதியில் வினா வகைகள் பற்றிய விளக்கத்தையும் தெளிவாக கற்றுக் கொள்ளலாம்.)

                   வினா வகை 


முன்னுரை :

           ★ என்ன ?

           ★ எப்படி ?

           ★ எதற்கு ?

           ★ எங்கு ?

           ★  ஏன் ?

      என வினாமேல் வினாவை கேட்டு விடை அறிய விரும்புகின்றவனே சிறந்த அறிவாளியாக ஆக முடியும் என்று சாக்ரடீசும், தந்தை பெரியாரும் கூறுவர். 

வினா வகை :

         வினா ஆறு வகைப்படும். அவை,

        1. அறிவினா 

        2. அறியா வினா 

        3. ஐய வினா 

        4. கொளல் வினா 

        5. கொடை வினா 

        6. ஏவல் வினா 


1. அறிவினா:

                தான் ஒரு பொருளை நன்கு அறிந்திருந்தும் அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்பதனை அறியும் பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா.

(எ.கா)

          ★ திருக்குறளை 

                இயற்றியவர் யார்? 

          ★ சிலப்பதிகாரத்தை

                இயற்றியவர் யார்? 

     என ஆசிரியர்  மாணவரிடம் வினவுகிறார்.

          விடையை ஆசிரியர் தாம் அறிந்திருந்தும் மாணவர் அறிந்துள்ளனரா என்று அறிய வினவப்பட்டதாகலின் அறிவினா ஆகும்.


2. அறியா வினா:

           தான் அறியாத ஒரு பொருளை அறிந்து கொள்வதற்காகப் பிறரிடம் வினவுவது அறியாவினா.

(எ.கா)

           ★ எட்டுத்தொகை நூல்களுள்

               புறம் பற்றியன எவை? 


           ★ ஐயா, இச்செய்யுளின்

                பொருள் யாது?


      என மாணவர் தான் அறியாத ஒன்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வினவுவது அறியா வினை ஆகும்.


3. ஐய வினா:

          தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒரு பொருள் குறித்து, ஐயத்தினைப் போக்கிக் கொள்வதற்காக வினவப்படும் வினா, ஐயவினா.

(எ.கா)

             ★அங்கே கிடப்பது பாம்போ?

                 கயிறோ?


             ★இதனைச் செய்தவர்

                    இராமனா?

                    இலக்குமணனா?


4. கொளல் வினா:

            தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு கடைக்காரரிடம் வினவும் வினா கொளல் வினா.

(எ.கா)

          ★ வணிகரே! பருப்பு

              உள்ளதா?

  என வணிகரிடம் வினவுதல்.

         பருப்பு இருப்பின் பெற்றுக் கொள்ளும் பொருட்டு கேட்கப்பட்டது ஆதலின் கொளல் வினா ஆகும்.


5. கொடை வினா :

          தான் ஒரு பொருளைக் கொடுப்பதற்காக, அப்பொருள் இருத்தலைப்பற்றி பிறரிடம் வினவுவது,கொடை வினா.

 (எ.கா)

            ★  மாணவர்களே!

                 உங்களுக்கு சீருடை

                 இல்லையோ?

             மாணவர்களுக்கு சீருடை கொடுக்கும் பொருட்டு கேட்கப்பட்டது ஆதலின் கொடை வினா ஆகும்.


6. ஏவல் வினா:

          ஒரு தொழிலைச் செய்யும்படி ஏவும் வினா ஏவல் வினா. 

(எ.கா)

            ★மனப்பாடச் செய்யுளைப்

                 படித்தாயா? 

            ★முருகா சாப்பிட்டாயா? 

            (இவை படி, சாப்பிடு என்று ஏவல் பொருளைத் தருகின்றன.) 


       அறிவு, அறியாமை, ஐயுறல்,

                            கொளல், கொடை,

       ஏவல் தரும் வினா ஆறும்

                                              இழுக்கார் 

                                                     - நன்னூல் 385

மீண்டும் 

       அடுத்த 

             பதிவில்,,.......🙏




Saturday, 2 November 2024

தமிழ் இலக்கணம் (முந்தைய பதிவில் எச்சம் பற்றிய விளக்கத்தையும் அதன் வகைகள் ஆன பெயரெச்சம், வினையெச்சம், முற்றெச்சம் பற்றிய விளக்கத்தையும் தெளிவாக அறிந்து கொண்ட நிலையில் ,இன்றைய இலக்கணம் கற்பித்தல் பகுதியில் தொகைநிலைத் தொடர்களின் வகைகள் ஆன வினைத்தொகை ,பண்புத்தொகை பற்றிய விளக்கத்தையும் தெளிவாக கற்றுக் கொள்ளலாம்.)

 தொகைநிலைத் தொடர்கள்



முன்னுரை :

        பெயர்ச் சொல்லோடு வினைச் சொல்லும் பெயர்ச் சொல்லும் சேரும் தொடரில் இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு, உவமை முதலியவற்றின் உறுப்புகளோ (தொக்கு) மறைந்து நிற்குமானால் அது தொகைநிலைத் தொடர் எனப்படும். இதனைத் தொகை என்றும் சுருக்கமாக கூறுவர்.


      வினைச் சொல்லோடு வினைச் சொல் சேர்ந்து தொகைநிலைத் தொடர் அமைவதில்லை.


தொகைநிலைத் தொடரின் வகைகள்:

       தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை, 


      1.வேற்றுமை தொகை

      2. வினைத்தொகை

      3. பண்புத்தொகை

      4. உவமைத்தொகை 

      5.உம்மைத் தொகை

      6. அன்மொழித்தொகை

 என்பனவாகும்.


       


1.
வேற்றுமை தொகை


திருக்குறள் படிக்கிறான்.   


இத்தொடர் 'திருக்குறளைப் படிக்கிறான்' என விரிந்து நின்று பொருளை உணர்த்துகின்றது.


        ஆனால் கொடுக்கப்பட்டுள்ள தொடரில் உள்ள இரு சொற்களுக்கும் இடையில் அப்பொருளை தரக்கூடிய '' என்னும் வேற்றுமை உருபு வரவில்லை. 


      அது தொக்கி நின்று பொருளை உணர்த்துகிறது.


      இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் உணர்த்துவதை வேற்றுமை தொகை என்று கூறுவர்.


 1.பால் அருந்தினான்

(பாலை அருந்தினான்)

                ( )     

          இரண்டாம் 

          வேற்றுமைத்தொகை

2. தலை வணங்கினான் 

(தலையால் வணங்கினான்) 

                   (ஆல்)  

         மூன்றாம் 

         வேற்றுமைத்தொகை

 3.பள்ளி சென்றாள்    

(பள்ளிக்குச் சென்றான்)       

                    (கு)

           நன்காம் 

           வேற்றுமைத்தொகை

4. சிறை நீங்கினான்    

(சிறையின் நீங்கினான்)    

                    (இன்)

               ஐந்தாம் 

              வேற்றுமைத்தொகை

 5.அழகன் நூல்    

(அழகனது நூல்)           

                    (அது)

               ஆறாம் 

               வேற்றுமைத்தொகை

6. மலை வாழ்வோர் 

(மலை கண் வாழ்வோர்)

                   (கண்)

               ஏழாம் 

               வேற்றுமைத்தொகை


        முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லாததால் அவற்றின் தொகையும் இல்லையாகும்.


உருபும், பயனும் உடன் தொக்க தொகை:


            தேர்ப்பாகன்


இத்தொடர் 'தேரை ஓட்டும் பாகன்' என விரிந்து பொருளை உணர்த்துகின்றது.


 கொடுக்கப்பட்டுள்ள தேர், பாகன் என்னும் சொற்களுக்கு இடையில் '' என்னும் வேற்றுமை உருபும்


     'ஓட்டும்' என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.


      இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும், அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.


        இதுவும் வேற்றுமை தொகையே ஆகும்.


 தேர்ப்பாகன் 

             (தேரை

                     ஓட்டும் பாகன்)

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை


 பொன் வளையல்

               ( பொன்னால் செய்த

                         வளையல் )

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை 


தலைவலி மருந்து

                 ( தலை வலிக்கு

                       தரும் மருந்து)

 நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை


 குழாய் தண்ணீர்

                ( குழாயிலிருந்து

                     கிடைக்கும்

                          தண்ணீர்)

 ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை


 காட்டுப்புலி

                  (காட்டின் கண்

                        வாழும் புலி)

 ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை


     ஆறாம் வேற்றுமை தொகையில் பயன் தரும் சொல் மறைந்து வருதல் இல்லை .



2.வினைத்தொகை
 


       குடிநீர்,

       விரிகடல். 

       குடி,விரி என்பவை வினைப் பகுதிகள். இவை முறையே  நீர்,கடல் என்னும் பெயர்ச் சொற்களோடு சேர்ந்து பெயரெச்சங்கள் ஆயின. மேலும் இவை 

               குடித்த நீர் 

               குடிக்கின்ற நீர்

               குடிக்கும் நீர் 

எனவும்

              விரிந்த கடல் 

              விரிகின்ற கடல்   

              விரியும் கடல் 

எனவும் முக் காலத்திற்கும் பொருந்தும்படி பிரிந்து பொருள் தருகின்றன.காலம் காட்டும் இடை நிலைகள் இப் பெயரெச்சங்களில்  தொக்கி இருக்கின்றன.

        இவ்வாறு காலம் காட்டும்    இடை நிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் வினைத் தொகை எனப்படும்.    காலம் கடந்த பெயரெச்சமே வினைத் தொகை ஆகும் .


குறிப்பு 

                 வினைபகுதியும் அடுத்துப் 

பெயர்ச்சொல்லும் அமைந்த

 சொற்றொடர்களிலேயே

 வினைத்தொகை அமையும்.


இதன் 

   தொடர்ச்சி 

         மீண்டும் 

            அடுத்த 

                   பதிவில்.........👍

👆This content sponsored by👇


"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"


Saturday, 19 October 2024

தமிழ் இலக்கணம் (முந்தைய பதிவில் சொற்றொடரின் வகைகளை பற்றி தெளிவாக அறிந்து கொண்ட நிலையில் ,இப்பகுதியில் எச்சம் பற்றிய விளக்கத்தையும் அதன் வகைகளையும் தெளிவாக கற்றுக் கொள்ளலாம்.)

                          
எச்சம்

முன்னுரை:

           படித்தான், 

           படித்த, 

           படித்து 


        ஆகிய சொற்களை கவனியுங்கள்.


       படித்தான் என்னும் சொல்லில் பொருள் முற்றுப்பெறுகிறது


       எனவே, இது வினைமுற்று ஆகும்.


        படித்த, படித்து ஆகிய சொற்களில் பொருள் முற்று பெறவில்லை


        இவ்வாறு பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது,


             1. பெயரெச்சம், 


             2.வினையெச்சம் 


என்று இரண்டு வகைப்படும்.


பெயரெச்சம்
 


     படித்த என்னும் சொல்      மாணவன், மாணவி, பள்ளி, புத்தகம், ஆண்டு போன்ற பெயர் சொற்களுள் ஒன்றைக் கொண்டு முடியும்.


(எ.கா)


     ★  படித்த மாணவன் 

     ★  படித்த பள்ளி


       இவ்வாறு பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும்.


       பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்.


(எ.கா)

பாடிய  பாடல்   - இறந்தகாலப்

                                 பெயரெச்சம் 

பாடுகின்ற 

     பாடல்            - நிகழ்காலப்

                                பெயரெச்சம் 

பாடும் பாடல் -  எதிர்காலப்

                                பெயரெச்சம்


தெரிநிலை பெயரெச்சம்: 

          செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம் எனப்படும்.

 (எ.கா)

        எழுதிய கடிதம்


       இத்தொடரில் உள்ள எழுதிய என்னும் சொல் எழுதுதல் எனும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாக காட்டுகிறது.


குறிப்புப் பெயரெச்சம்:

          செயலையோ காலத்தையோ தெளிவாக காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் பெயரெச்சம் குறிப்பு பெயரெச்சம் எனப்படும்.


(எ.கா)


       சிறிய கடிதம்


       இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல்லின் செயலையோ, காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறிய முடிகிறது.


வினையெச்சம் 


       வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும். 


(எ.கா)


           படித்து முடித்தான் 

           படித்து வியந்தான்


        படித்து என்னும் சொல் முடித்தான் ,வியந்தாள், மகிழ்ந்தார் போன்ற வினைச்சொற்களுள் ஒன்றைக் கொண்டு முடியும்.


தெரிநிலை வினையெச்சம்: 


        செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.


(எ.கா)


        எழுதி வந்தான்.


        இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாக காட்டுகிறது.


குறிப்பு வினையெச்சம்: 


         காலத்தை வெளிப்படையாக காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் குறிப்பு வினையெச்சம் எனப்படும். 


(எ.கா)


           மெல்ல வந்தான்.


           இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாக காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது.


முற்றெச்சம் 


         ஒரு வினைமுற்று எச்ச பொருள் தந்து மற்றொரு வினைமுற்றை கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும். 


(எ.கா)


       வள்ளி படித்தனள்.


        இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்தாள் என்னும் வினைமுற்றுப் பொருளைத் தருகிறது.


(எ.கா)


      வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.


        இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. 




மீண்டும் 

         அடுத்த 

                   பதிவில்……

                                       நன்றி!

                                                  

                               👀👀



Tuesday, 8 October 2024

(தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் ) இன்றைய இலக்கணம் கற்பித்தல் பகுதியில் சொற்றொடரின் வகைகளில் கட்டளைத் தொடர், தனிநிலைத் தொடர், தொடர் நிலைத்தொடர், கலவைத் தொடர் ஆகியவற்றைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

 


சொற்றொடர் வகைகள்

முன்னுரை:

      சொற்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவது சொற்றொடர் எனப்படும். சொற்றொடரின் வகைகள் பற்றிய முந்தைய பதிவின் தொடர்ச்சியைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

💥 கட்டளைத் தொடர்:


       நீ பள்ளிக்குப் புறப்படும் போது, உன்னிடம்  அம்மா கூறுவது என்ன? 


             பார்த்துப் போ, 


             கவனமாகப் படி என்று தானே.


       இவ்வாறு,    ஒரு   செயல் அல்லது   சில    செயல்களை     பின்பற்றும்படி   ஆணையிட்டு கூறுவது கட்டளைத் தொடர்.


(எ.கா)


            வேகமாக செல்  

            புத்தகத்தை எடு


💥 தனிநிலைத் தொடர்:

 

       ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையை கொண்டு முடிவது தனிநிலைத் தொடர்.


(எ.கா)


        1. அழகன் பாடம் எழுதுகிறான் .


        2. மா,‌ பலா,வாழை ஆகியன முக்கனிகள் 


           இத்தொடர்களில் முதல் தொடரில் அழகன் என்பது எழுவாய்.


            இரண்டாம் தொடரில் மா, பலா, வாழை என்பன எழுவாய்கள் .


            இவ்வாறாக ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையை கொண்டு முடிவது தனிநிலைத் தொடர்.


💥தொடர்நிலைத் தொடர்:


         ஓர்      எழுவாய்       பல பயனிலைகளைக் கொண்டு முடிவது தொடர்நிலைத்தொடர்.


        தொடர்நிலை தொடர்கள்  

                 💥  அதனால்,    

                 💥  ஆகையால், 

                 💥  ஏனெனில்  முதலிய            இணைப்புச்    சொற்களைப்          பெற்று வரும்.

       

(எ.கா)


          ★ கார்மேகம் கடுமையாக உழைத்தார்; அதனால் வாழ்வில் உயர்ந்தார் .


           ★ நேற்று மழை பெய்தது; அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின.

 

 💥 கலவைத் தொடர்: 


      1.நேற்று புயல் வீசியதால் பள்ளிக்கு விடுமுறை.


      2. முருகன் இரவும் பகலும் அயராது படித்ததால் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றான்.


      இவ்வாறு ,ஒரு தனி சொற்றொடர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை தொடர்களுடன் கலந்து வருவது கலவைத் தொடர் ஆகும்.


               இதன் தொடர்ச்சி மீண்டும் அடுத்த பதிவில்.... 👍

👆👆This content sponsored by👇👇


"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"


Sunday, 8 September 2024

தமிழ் இலக்கணம் (சொற்றொடர் வகைகள்)

 1.செய்தித்தொடர்


         அ)  பரிதிமாற் கலைஞர்        மதுரைக்கு அருகில் உள்ள விளாச்சேரியில் பிறந்தார்.


        ஆ) திருவள்ளுவர் திருக்குறளை   இயற்றினார்.


        இவ்விரு தொடர்களும் செய்திகளைத்  தெளிவாக எடுத்துக்  கூறுகின்றன. இவ்வாறு  ஒரு கருத்தினை செய்தியாக  தெரிவிப்பது செய்தித்தொடர் எனப்படும்.


2. வினாத்தொடர்


எழில்,என்ன சாப்பிட்டாய்? 


ன்பரசி, நேற்று நீ ஏன் பள்ளிக்கு வரவில்லை?


எங்கே செல்கிறாய்?


      இவ்வாறு வினாப் பொருளைத் தரும் தொடர் வினாத்தொடர் எனப்படும். 

         ★ என்ன? 

         ★  ஏன்? 

         ★  எங்கே? 

         ★  எப்படி? 

         ★  எதற்கு? 


முதலிய வினாச் சொற்கள் வினாத் தொடரில் அமையும்.


3. உணர்ச்சித் தொடர்


         நீங்கள் சென்னைக்கு அருகில் உள்ள பூண்டி ஏரியை பார்த்ததுண்டா?


        அதனைப் பார்த்ததும் உங்களுக்கு தோன்றியது என்ன?  


"அடேயப்பா! எவ்வளவு பெரிய ஏரி!"


        கண்ணகியும் கயல் விழியும் பாதையில் நடந்துகொண்டே பேசிச் செல்கின்றனர்.

        கயல்விழியின் காலில் முள் ஆழமாக் குத்திவிட்டது. உடனே, அவள் எப்படி அலறியிருப்பாள்? 


"ஐயோ, முள் குத்தி விட்டதே!"


       இவ்வாறு நாம் பேசும் செய்திகள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் தொடர்களாக அமைந்தால் அவற்றை உணர்ச்சி தொடர்கள் என்கிறோம்.


       ★.     மகிழ்ச்சி,

       ★.    வியப்பு, 

       ★.    துன்பம் 


முதலிய உணர்ச்சிகள் வெளிப்படுமாறு அமைவது, உணர்ச்சித் தொடர். 


         என்னே என்னும் சொல்லை வியப்புக் குறித்தும், 


         அந்தோ என்னும் சொல்லை துன்பம் குறித்தும் சொற்றொடர்களில் அமைத்துக் காட்டலாம்.


(எ.கா)


என்னே, இமயமலையின் உயரம்!


அந்தோ, நாய் வண்டியில் அடிபட்டு விட்டதே!




மீண்டும் அடுத்த பதிவில்........


Please click the follow button, 🙏 🙏 🙏 🙏 



      

புதிய ஆத்திச்சூடி ( பாரதியார்)

புதிய ஆத்திச்சூடி - பாரதியார் ******************************************   காப்பு  -  பரம்பொருள்  வாழ்த்து:          " ஆத்திசூடி இளம்பி...