Monday, 30 June 2025

தமிழர் இசை ( இசைக் கலை)

இசைக் கலை:

              இசைையானது சிறப்புடைய கலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஒலியின் அடிப்படையில் அமைவது இசைக்கலை. அதைக் கேட்டுத்தான் சுவைக்க முடியும்.
       
               ஒளியை நுட்ப உணர்வால் செவிப்புலனின் நுகர்வுத் திறன் கொண்டு பாகுபடுத்தி ஒலிப்பகுதிகளை முறையாக ஒன்றுடன் ஒன்றாகச் சுவை தரும் வண்ணம் இணைத்து இன்னிசை எழுப்புமாறு அமைத்துக் காட்டுவதில் இசைக்கலை தோற்றம் கொள்கிறது.

              கரடு முரடாக இருக்கும் ஒலியை மனத்தால் கட்டுப்படுத்தி அறிவுத்திறனால் ஒழுங்கான முறையமைப்புக்குக் கொண்டுவந்து சீர்ப்படுத்துவதில் இசைக்கலையின் அடிப்படைத் தன்மை அமைந்துள்ளது.

            ஒலி பலவகையாக எழுவது.  பலவிதமாகச் செவிப்புலனில் பதிவாவது.    எவற்றிலிருந்தும் ஒலி எழலாம்.  எவ்வாறு வேண்டுமென்றாலும் அது எழலாம்.எப்படி எழுந்தாலும் அனைத்தும் ஒலியாகவே கருதப்படும்.

          அது வன்மையாகவோ மென்மையாகவோ சமனாகவோ இத்தன்மைகள் கலந்தனவாகவோ அமையலாம்.எத்தன்மையுடையதாக இருப்பினும் அது ஒளி என்னும் பொது சொல்லில் அடக்கப்பட்டுவிடும்.

            ★ ஒலியை குறிப்பிடத்தக்கவை
                  (significant sounds ) 

            ★ குறிப்பிட்டு காட்ட முடியாத குழப்ப
                 ஒலிகள் (confused sounds )

என இரு கூறாகப் பிரிக்கலாம்.

குறிப்பிடத்தக்க ஒலிகள்:

                 ★ குயிலின் கூவல்,

                 ★ பசுவின் கதறல்,

                 ★ வண்டியின் முரன்றொலி,

                 ★ அருவியின் பாயொலி,

                 ★ யாழொலி,

                 ★ அழுகையொலி,

                 ★ பாடலிசை,

                 ★ வெடியொலி 

                 ★ இடி முழக்கம் ஆகியவை
 குறிப்பிட்டு காட்டத்தக்கவை.


குழப்ப ஒலிகள்

              ★ சந்தை இரைச்சல்,

              ★ விழாவொலி,

              ★ காட்டுக் கூச்சல் போன்றவை குழப்ப ஒலிகள்.

           குறிப்பிட்டுக் காட்டத்தக்க ஒலிகளை மூன்று வகையாகப் பிரித்துக் காட்டலாம்.

          1. இனியவை (Mellifluous)
              (குழலிசை, பாவிசை, கூட்டிசை 
               ஆகியவை இனிய ஒலிகள்)

          2.  சாதாரணமானவை (ordinary) 
              ( பூனை கத்தல், மரக்கொம்புகள்
                உரசலொலி, காக்கை கரைதல்,
                பேச்சொலி போன்றவை
                 சாதாரண ஒலிகள்)
       
          3.  கடுமையானவை (Hard)
               ( புலியின் உறுமல், இடிக்குரல்,
                 சீற்றவுரை, குண்டு வெடித்தல்
                 முதலியன கடுமையானவை)
 
இனிய ஒலிகள்:

           ★ தனித்து இனிப்பவையாகவும்.
                (singularly harmonious
           ★ கூட்டாக இணைந்து இனிப்பவையாகவும்
                (harmoniously blended sounds in band)
இரண்டாகப் பிரிக்கலாம். 
             
               தனித்து ஒருவர் பாடுதல்,
குழலை மட்டும் இசைத்தல், முழவிசை, தவிலிசை போன்றவை தனித்தினிக்கும் ஒலிகள். 

                  யாழும், குரலும், முழவும் இணைந்து இசையும் தாளமும் பொருந்தி இன் குரலாக அமைவது கூட்டின்னிசையாகும். பலவகையான இசையின் இனிய கூட்டுச் சேர்க்கையால் தனி ஒருவர் பாடுவதையும் இனிய கூட்டிசையாக கருதுவதும் உண்டு.

        இசையிணைவின்றி இனிமை தோன்றாது. ஆகையினால் தனித்தினிப்பவையும் கூட்டிசையே ஆகும் என்பதை நன்கு உணர வேண்டும்.

         நுட்பமான முறையில் ஒலியைப் பிரித்து உணர வேண்டியுள்ளது.

         செவிப்புலனின் திறனால் கேட்டு நுனித்துணரும் மனப்பக்குவ நிலையால் நன்கு அறிந்து ஒலியின் தன்மையை தெரிந்து கொள்வோருக்கு இசை கலை சாதனை ஆகும். இசை ஓர் அரிய கலை என்பது இதனால் விளங்கும்.


மீண்டும்  

              அடுத்த 
  
                             பதிவில் ........ 

                                           🙏   நன்றி. 🙏
     
                

Saturday, 21 June 2025

தமிழர் இசை ( கலையின் சிறப்பு)

 கலையின் சிறப்பு: 


        கலைகள் மிகவும் ஆற்றல் உடையவை. அவற்றின் சிறப்பு அளவிட்டுக் காண்பதற்கு அரியது. 


        அவை உலகவியல்பையும் மனித உள்ளத்தின் இயல்பையும் வெளிப்படுத்திக் காட்டுகின்றன. 


          ஒவ்வொரு மனித உள்ளமும் தனி ஒரு உலகமாக விளங்குகிறது.


         கலைஞனின் உள்ளத்தில் விளங்கும் உலகத்தை கலைகள் புலப்படுத்திக் காட்டுகின்றன.


         கவி ரவீந்திரநாத் தாகூர் கூறுவது போல் கலையின் வாயிலாக மனிதன் வெளிப்படுத்திக் கொள்வது தன் செய்திகளையோ நோக்கங்களையோ அல்ல;


            மனிதன் கலைகளின் வழியாகத் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்கிறான்.


           கலைஞரின் மன எண்ணங்கள் உருவாக்கிய உலகம் கலைகளின் வாயிலாக வெளியிடப்படுகிறது. கலைகளின் புலப்பாடாக

           ★ மனிதனின் நாகரிகம்,

           ★ பண்பாடு, 

           ★ வாழ்க்கை முறை, 

           ★ சமூக அமைப்பு, 

           ★ சமுதாய உணர்வு, 

           ★ சமய கோட்பாடு,

           ★ பழக்கவழக்கங்கள்,

           ★ நம்பிக்கைகள்,

           ★ சீர்திருத்தங்கள்,

           ★ சிந்தனைகள்

 அனைத்தும் வெளிப்படுகின்றன.


         சிறப்புடைய கலைகளை உன்னதமான அமைப்பில் உருவாக்காத எந்த நாடும் உயர்ந்து வளர்வது இல்லை. அத்தகைய நாடுகளுக்கு வரலாற்றில் உயர்வான இடம் தரப்படுவது இல்லை.


         வெள்ளப் பெருக்கினை போன்று கலை பெருக்கம் இருக்கும் நாடே முன்னேற்றம் அடைந்த நாடு. 


         கவின் கலைகள் இல்லையெனில் அந்த நாட்டில் உயிர்ப்பும் உணர்ச்சியும் இல்லை என்றுதான் பொருள்.


          கலை மனித வாழ்வின் சிறப்பான வளர்ச்சிக்கு உயிரோட்டமாக உள்ளது.


          கலையை அனுபவிப்பதில்தான் அதன் சிறப்பு அடங்கியிருக்கிறது. கலைப் பயனை துய்க்கத் தெரியாதவர்களிடம் கலைகள் பயனற்று பாழாகிவிடும்.


         கலைஞன் அழகை அனுபவிக்கிறான். அந்த அனுபவத்தை பிறரிடம் பங்கிட்டு மகிழ்வதில்தான் கலையின் சிறப்பு அடங்கியிருக்கிறது.


         அனுபவிக்காத கலை பயனற்ற தேக்கமாகவே அமையும். மக்கள் கலையை நன்கு அனுபவித்து மகிழ்வதில்தான் அதன் ஆக்கமும் வெற்றியும் அடங்கியிருக்கிறது.


          கலைகள் ஒரே மாதிரியாக அமைந்து விடுவதை சிறப்பாக கருத முடியாது .அது நாளும் நாளும் வளர வேண்டும். சீர்பட வேண்டும். 


         கட்டிடம் கட்டுவது ஒரு கலைதான் ஆனால் ஒரே அமைப்பில் மாற்றம் ஏதும் இன்றி அமைவதை கலையாக கருத முடியாது.


       தூக்கணாங்குருவி மிக அழகான அமைப்பில் கூடு கட்டினாலும் அதை கலையாக கருத முடியாது. அது ஓர் இயல்பாகவே கருதப்படும்.


        மனிதன் கட்டிடம் அமைப்பதில் மாற்றம் காட்டுகிறான். தோற்ற பொலிவைக் காட்டுகிறான்.


        வாழ்க்கை அமைப்புகளும் வசதிகளும் மாறுவதற்குத் தக்கவாறு கட்டிட அமைப்பு முறைகளை மாற்றியும், வேண்டிய வசதிகளை அமைத்தும் காட்டுகிறான். அந்த அமைப்பில் தன் திறமையால் கலைத் தன்மைகளைக் காட்டுகிறான். அது கலையாகி விடுகிறது.


        கலையின் சிறப்பு அதைச் சுவைத்து மகிழ்வதிலும் பிறருடன் அனுபவிப்பதிலும் முக்கியமாக அடங்கி இருக்கிறது.மாற்றமும் தோற்றமும் கலைக்கு உயிரையும் உணர்வையும் கொடுக்கிறது.


       கலைகளே மனிதனின் உயர்தனிச் சிறப்புக்கு உரைகல்லாக அமைகின்றன. கலையின் சிறப்பு கணக்கில் அடங்காது.


      மீண்டும் 

                அடுத்த  

                         பதிவில்..........


                           நன்றி!


          


Wednesday, 18 June 2025

தமிழர் இசை (கலையின் தன்மை)

கலையின் தன்மை :

 

        மனித மனம் அழகுணர்ச்சி உடையது. இனியதை விரும்புவது. உலக அனுபவங்களை கொண்டு மனிதன் விரும்புவதை நன்கு உணர்ந்து தன்னுடைய அறிவின் திறத்தால் அழகானவற்றை சிறப்பாகப் படைத்துப் பிறர் வியக்கும் வண்ணம் செய்வது கலையின் அடிப்படையாகும். அது இன்பம் அளிப்பதற்கு உரியதாகவும் அமைவதாயின் சிறந்த கலையாக அனைவராலும் மதிக்கப்படும். 


            கலை மனித சாதனைகளில் உயர்வானதாக கருதப்படுவது. மனித நாகரீகத்தின் சிறப்பை கலைகளைக் கொண்டு அறியலாம் பண்பாட்டுத் தன்மை கலைகளால் உணரப்படும்.


           கலை மக்களை கவர்ந்து அவர்களுடைய அழகுணர்ச்சிக்கு அருமையான விருந்து படைக்கும். கலைச் சிறப்பில்லாத காலகட்டம் மனித வாழ்வின் மங்கிய வரலாறாகவே கருதப்படும். 


         சிந்தனையின் முகிழ்ப்பில் தோன்றிப் படைப்புத்திறனால் உருப்பெற்று இன்ப உணர்வுக்கு காரணமாகி அழகு தன்மையுடன் விளங்கும் கலை அனைவராலும் சிறப்பிக்கப்படுகிறது. 


         கலையின் மேன்மை மனித மனத்தை கவர்ந்து சுவையூட்டுவதில் தான் இருக்கிறது. கலைகள் வளர்வது மனிதனின் முன்னேற்றத்தை காட்டுவதாகும்.


            மக்கள் முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் விரும்பும் இயல்புடையவர்கள். அந்த இயல்புக்குத் தக்கவாறு அவர்கள் உருவாக்கும் கலைகள் முன்னேற்றங்களுடன் மாற்றமடைவதை விரும்புகிறார்கள்.


         கலையின் பழமை பெருமையுடன் காக்கப்படும். ஆயினும் அதில் புதுமைகள் புகுத்தப்படுவது விரும்பி வரவேற்கப்படும். கலையின் புதுமையில் இயல்புத் தன்மைகள் அமையாவிட்டால் அது சுவையில் குன்றிச் சீர்மையற்றதாக கருதப்படும்.


         கலையைப் பற்றி விளக்கம் தரும் டி.வி. நாராயணசாமி கலை என்பது மக்களது வாழ்வியலை பண்பாட்டை நாகரீகத்தை எடுத்துக்காட்டும் கண்ணாடி என்று எடுத்துக்காட்டுகிறார்.


       மக்கள் வாழ, வளரச் சமுதாய நீதிகளையும் அறத் தத்துவங்களையும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டிட, கலையைப் போல் வேறு சாதனம் இல்லை என்றும் கூறுகிறார்.


         கலைகள் மக்களின் வாழ்வைக்கொண்டு அமைக்கப்படுபவை. வாழ்வியல் கூறுகளை எடுத்துக்காட்டும் தன்மை உடையவை.   அதில் தவறுகள் சுட்டப்படும் திருத்தங்கள் காட்டப்படும்.சமூக உண்மைகள் உரைக்கப்படும் .


        நீதி, நியாயம், அறம், மறம் அனைத்தும் கலைத்தன்மையுடன் கவின் அழகு விளங்க நன்மை நாட்டமாக உள்ளதைக் கவர்ந்து உணர்ச்சியை ஊட்டும் தரமாக காட்டப்படும். 


        இத்தகைய உணர்வுக் கலப்பான கலைகளே வாழும் இயல்பு கொண்டவை. நிலையான கருத்துக்களை முறையாக காட்டும் தன்மையுடையவைதான், என்றும் நிலைத்து வாழும் நல்ல கலைகள். சமுதாய உணர்வற்ற கலைகள் பயனற்ற பொழுது போக்குகள் ஆகும்.

       

  சமயங்கள் சமுதாயத்தின் ஒரு பகுதியாக அமைகின்றன. அவற்றை வளர்க்க அரிய கலைகள் உரிய முறையில் பயன்படுத்தப் பெற்றுள்ளன . உலக நாடுகளில் எல்லாம்,    உன்னதமான கலைகளைச் சமயங்களே சிறப்பாக ஊட்டி வளர்த்துள்ளன.


           அருள் நிலையில் அரியவற்றை சாதிப்பது போல் பொருளுடைய கலைகளை அருளுடைய சமயங்கள் நலமாக பேணி தங்கள் நினைப்புக்கு தக்கவாறு அமைத்து ஊக்கமுடன் வளர்த்து வந்துள்ளன.  


         சமயம் நலங்காணச் சார்புடைய கலைகள் நன்கு உதவியுள்ளன. தமிழ்நாட்டு கலைகளை பெரும்பாலும் சமயங்களே தாயாகித் தாலாட்டி வளர்த்துள்ள நிலையைக் காணலாம். கலைகள் மனித உணர்வில் மாற்றங்களையும் ஏற்றங்களையும் கொடுக்கும் ஆற்றலுடையவை.


       விரும்பத்தக்கதாக உள்ளது எதுவோ அதுவே கலை. நலமானதாக உள்ளது எதுவோ அதுவே கலை. உள்ளத்தை ஈர்ப்பதாக உள்ளது எதுவோ அதுவே கலை.


         காண்பார் உள்ளத்தை ஈர்க்கும் ஆற்றலே கலை ஆற்றல். ஒன்றினைக் காண்பார் உள்ளத்தை ஒன்றினோடு ஈடுபாடு கொள்வார் உள்ளத்தை ஈர்க்கும் தன்மை எதுவோ அதுவே கலைத்தன்மை.


          கலை என்பதற்கு பொதுப்பட அழகு எனப் பொருள் கூறுவர் .அவ்வழகு உருவ வகையில், உறுவியக்க வகையில், ஒலிவகையில், ஒலி முறைப்பட்ட தொழில் வகையில், தொழில் முறையில் அமைவதாகும் என்று செந்துறை முத்து உணர்வான சிந்தனைக்குரிய சிறந்த விளக்கத்தை கலைக்கு உரியதாகத் தருகிறார்.


          கலை என்பது வாழ்க்கையுடன் ஒட்டி உறவாடும் தன்மை உடையது; மனித மனத்துடன் ஒன்றிப் பற்றும் ஆற்றல் உடையது; அதில் வாழ்க்கை விளங்கும்; மன எண்ணங்கள் துலங்கும்; உணர்வுகள் புலப்படும்; மனித இயல்புகள் தோன்றும்; மரபு வழி திறக்கும்; மாற்றங்கள் தெரியும்; மாண்புகள் இலங்கும்; இன்பம் கனியும்; பண்பாட்டு மேன்மையும் பழக்கவழக்கச் சீர்மையும் அறிவு விளக்கத் தன்மையும் அகத்தெழும் உணர்வின் பான்மையும் கலைகள் வாயிலாகக் கவினுற விளங்கும். 


      அழகுணர்ச்சி உடைய மனிதனால் கலைகளை உருவாக்கவும் உருவாக்கப்பெற்ற கவின் கலைகளைச் சுவைக்கவும் முடியும்.


       கலைகள் இன்றி இன்பமான பயனை இயல்பான முறையில் மனித வாழ்க்கை அனுபவிக்காது என்று கூறலாம். எத்தனை எத்தனை வகையான கலைகளை எந்த எந்த முறையில் மனிதன் உருவாக்கியுள்ளான் என்று சிந்திப்பதே ஒரு சுவையான அனுபவமாகும். 

                     

      மீண்டும் 

                      அடுத்த 

                                  பதிவில்  .........


                             நன்றி  🙏🙏🙏      

             

Sunday, 8 December 2024

தமிழ் இலக்கணம் (வேற்றுமையின் வகைகள் 4,5,6,7,8)

வேற்றுமையின் வகைகள்

முன்னுரை:


          முந்தைய பதிவில் வேற்றுமை, வேற்றுமையின்  உருபுகள், முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை பற்றி விரிவாக அறிந்து கொண்டோம். மீதமுள்ள வேற்றுமையின் வகைகளை கீழே காணலாம்.


நான்காம் வேற்றுமை:


          நான்காம் வேற்றுமைக்கு உரிய உருபு கு என்பதாகும். இது,

                ★கொடை,  

                ★பகை,

                ★நட்பு, 

                ★தகுதி,

                ★அதுவாதல்,

                ★பொருட்டு,

                ★முறை, 

                ★எல்லை.

எனப் பல பொருள்களில் வரும்.

 (எடுத்துக்காட்டு)

 கொடை         -      முல்லைக்குத் தேர் 

                                 கொடுத்தான்.

 பகை              -       புகை மனிதனுக்கு பகை 

 நட்பு                -       கபிலருக்கு நண்பர் பரணர்.

 தகுதி             -       கவிதைக்கு அழகு கற்பனை.

 அதுவாதல்   -       தயிருக்குப் பால்

                                  வாங்கினான்

 பொருட்டு    -        தமிழ் வளர்ச்சிக்குப்

                                  பாடுபட்டார்.

 முறை           -        செங்குட்டுவனுக்கு தம்பி

                                 இளங்கோ

 எல்லை         -       தமிழ்நாட்டுக்கு கிழக்கு

                                 வங்கக்கடல்.
 
            நான்காம் வேற்றுமை உறுப்புடன் கூடுதலாக ஆக என்னும் அசை சேர்ந்து வருவதும் உண்டு.

 எடுத்துக்காட்டு: 

                           கூலிக்காக வேலை 

 ஐந்தாம் வேற்றுமை :

            இன், இல் ஆகியவை ஐந்தாம் வேற்றுமை உருபுகள் ஆகும். இவை,
               
             ★ நீங்கல்

             ★  ஒப்பு 

             ★  எல்லை 

              ★  ஏது

 போன்ற பொருட்களில் வரும்.

 (எடுத்துக்காட்டு)

    நீங்கல்     -    தலையின் இழிந்த மயிர்.

    ஒப்பு          -    பாம்பின் நிறம் ஒரு குட்டி.

     எல்லை   -     தமிழ்நாட்டின் கிழக்கு

                              வங்கக்கடல்.

      ஏது           -     சிலேடை பாடுவதில்

                             வல்லவர் காளமேகம்.

 ஆறாம் வேற்றுமை :

        அது, ஆது, அ ஆகியவை ஆறாம் வேற்றுமை உருபுகள் ஆகும். இவ்வேற்றுமை உரிமைப்பொருளில் வரும். உரிமை பொருளை கிழமைப் பொருள் என்றும் கூறுவர்.
 
 (எடுத்துக்காட்டு)

         இராமனது வில்,

         நண்பனது கை.

         அது, அ ஆகிய உருபுகளை இக்காலத்தில் பயன்படுத்துவது இல்லை.

 ஏழாம் வேற்றுமை:

       ஏழாம் வேற்றுமைக்கு உரிய உருபு கண். மேல்,கீழ்,கால்,இல்,இடம் போன்ற உருபுகளும் உண்டு.
             இடம், காலம் ஆகியவற்றை குறிக்கும் சொற்களில் ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெறும்.

 (எடுத்துக்காட்டு)

            எங்கள் ஊரின்கண் மழை பெய்தது.

            இரவின்கண் மழை பெய்தது.

 குறிப்பு: இல் என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் உண்டு. நீங்கள் பொருளில் வந்தால் ஐந்தாம் வேற்றுமை என்றும் இடப்பொருளில் வந்தால் ஏழாம் வேற்றுமை என்றும் கொள்ள வேண்டும்.

 எட்டாம் வேற்றுமை:

            இது விளிப்பொருளில் வரும் படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதையே விளி வேற்றுமை என்கிறோம். 
          
             இவ்வேற்றுமைக்கு என்று தனியே உருபு கிடையாது பெயர்கள் திரிந்து வழங்குவது உண்டு அண்ணன் என்பதை அண்ணா என்றும் புலவர் என்பதை புலவரே என்றும் மாற்றி வழங்குவது எட்டாம் வேற்றுமை ஆகும்.

 (எடுத்துக்காட்டு)

                கண்ணா வா!





 மீண்டும் 

             அடுத்த 
         
                      பதிவில்........

                               🙏  சந்திப்போம்🙏



Sunday, 24 November 2024

தமிழ் இலக்கணம் ( வேற்றுமை, வேற்றுமை உருபுகள், அதன் வகைகள்1,2,3)

 வேற்றுமை 

முன்னுரை:


             பாவை அண்ணன் பார்த்து,"அண்ணன் எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்று கேட்டாள்."இந்த அண்ணன் செய்ய முடிந்த உதவி என்றால் உறுதியாகச் செய்வேன்" என்றான் அண்ணன். "என் அண்ணன் உள்ளம் எனக்குத் தெரியும். என் அண்ணன் என் மீது மிகுந்த அன்பு உண்டு" என்றாள் பாவை.


            மேலே உள்ள பகுதியைப் படித்துப் பாருங்கள். இதில் கூறப்பட்டுள்ள செய்தியை புரிந்து கொள்ள இயலாதவாறு ஒரு குழப்பம் உள்ளது அல்லவா?


             இதே பகுதியைக் கீழே உள்ளவாறு படித்துப் பாருங்கள்.

              

          பாவை அண்ணனைப் பார்த்து,"அண்ணா எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்று கேட்டாள்."இந்த அண்ணனால் செய்ய முடிந்த உதவி என்றால் உறுதியாகச் செய்வேன்" என்றான் அண்ணன். "என் அண்ணனது உள்ளம் எனக்குத் தெரியும். என் அண்ணனுக்கு என் மீது மிகுந்த அன்பு உண்டு" என்றாள் பாவை.


               இப்போது எளிதாகப் பொருள் புரிகிறது அல்லவா?

         

             இரண்டாம் பகுதியில் அண்ணன் என்னும் பெயர்ச்சொல்


     ★ அண்ணனை, 

     ★ அண்ணா, 

     ★ அண்ணனால்,    

     ★ அண்ணனுக்கு


         என்றெல்லாம் மாற்றப்பட்டிருப்பதால் பொருள் தெளிவாக விளங்குகிறது.


வேற்றுமை உருபுகள்: 


             அண்ணன் என்னும் பெயர்ச்சொல்லுடன் ஐ, ஆல், கு, இன், அது போன்ற அசைகள் இணைந்து அச்சொல்லின் பொருளை பல்வேறு வகையாக வேறுபடுத்துகின்றன.


            இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை வேற்றுமை என்பர்.


            இதற்காக பெயர் சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை வேற்றுமை உருபுகள் என்று கூறுவர். 


வேற்றுமையின் வகைகள்: 


            வேற்றுமை எட்டு வகைப்படும்.  அவை,


        1. முதல் வேற்றுமை 

        2. இரண்டாம் வேற்றுமை

        3. மூன்றாம் வேற்றுமை

        4. நான்காம் வேற்றுமை

        5. ஐந்தாம் வேற்றுமை

        6. ஆறாம் வேற்றுமை 

        7. ஏழாம் வேற்றுமை 

        8. எட்டாம் வேற்றுமை

ஆகியனவாகும்.


        முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை.


        இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம்  வேற்றுமை  முடிய உள்ள ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உண்டு.


முதல் வேற்றுமை: 


       பெரும்பாலான சொற்றொடர்களில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகிய மூன்று உறுப்புகள் இடம் பெற்றிருக்கும். 


         எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளை தருவது முதல் வேற்றுமை ஆகும். முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்றும் குறிப்பிடுவர்.


 ( எடுத்துக்காட்டு)


             பாவை வந்தாள்.


இரண்டாம் வேற்றுமை:


          இரண்டாம் வேற்றுமை உருபு என்பதாகும்.


      கபிலர் பரனரைப் புகழ்ந்தார்.

      கபிலரை பரணர் புகழ்ந்தார்.


      இவ்விரு தொடர்களையும் கவனியுங்கள் இரண்டாம் வேற்றுமை உருபு எந்த பெயருடன் இணைக்கிறதோ அப்பெயர் செயப்படும் பொருளாக மாறிவிடுகிறது.


       இவ்வாறு ஒரு பெயரை செயப்படுபொருளாக வேறுபடுத்தி காட்டுவதால் இரண்டாம் வேற்றுமையை செயப்படு பொருள் வேற்றுமை என்றும் கூறுவர்.


        இரண்டாம் வேற்றுமை 

       ★  ஆக்கல் 

       ★  அழித்தல் 

       ★  அடைதல் 

       ★   நீத்தல் 

       ★   ஒத்தல் 

       ★   உடைமை 

       ஆகிய ஆறு வகையான

பொருள்களில் வரும்.


ஆக்கல்     -     கரிகாலன்

                            கல்லணையை

                            கட்டினான்.


 அழித்தல் -    பெரியார்

                        மூடநம்பிக்கைகளை

                            ஒழித்தார்.


 அடைதல் -    கோவலன்

                           மதுரையை

                           அடைந்தான்.


நீட்டல்.       -     காமராசர்

                            பதவியைத்

                            துறந்தார். 


ஒத்தல்     -      தமிழ் நமக்கு

                            உயிரைப்  

                            போன்றது.


 உடைமை  -    வள்ளுவர் பெரும்

                             புகழை உடையவர்.


மூன்றாம் வேற்றுமை:


       ஆல், ஆன்,ஒடு, ஓடு ஆகிய நான்கும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் ஆகும். 


       இவற்றுள் ஆல், ஆன் ஆகியவை     


        1.கருவிப்பொருள், 

         2.கருத்தாப் பொருள் 


       ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும்.


 கருவிப்பொருள்:


        1.முதற்கருவி 

        2.துணைக் கருவி 

என இரண்டு வகைப்படும்.


முதற்கருவி:


      கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது முதற்கருவி.


( எடுத்துக்காட்டு)


       மரத்தால் சிலை செய்தான்.


துணைக் கருவி: 


        ஒன்றை செய்வதற்கு துணையாக இருப்பது துணைக்கருவி.


( எடுத்துக்காட்டு)


       உளியால் சிலை செய்தான்.


கருத்தா பொருள் :


      கருத்தா பொருள் 

       1.ஏவுதல் கருத்தா

       2. இயற்றுதல் கருத்தா

என இரு வகைப்படும்.


ஏவுதல் கருத்தா:

       பிறரை செய்ய வைப்பது ஏவுதல் கருத்தா. 


( எடுத்துக்காட்டு)


        கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.


இயற்றுதல் கருத்தா: 


         தானே செய்வது இயற்றுதல் கருத்தா


( எடுத்துக்காட்டு)


      சேக்கிழாரால்

                 பெரியபுராணம்

                            இயற்றப்பட்டது.


     ஆன் என்னும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும்.


( எடுத்துக்காட்டு)


      புறந்தூய்மை நீரான்

                அமையும்.


       ஒடு,  ஓடு  ஆகிய  மூன்றாம் வேற்றுமை  உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.


( எடுத்துக்காட்டு)


★ தாயொடு குழந்தை சென்றது.

★ அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.


மீதமுள்ள வேற்றுமை வகைகளை அடுத்த பதிவில் தொடரலாம்.🙏🙏


Sunday, 17 November 2024

தமிழ் இலக்கணம் (முந்தைய பதிவில் வினா வகைகளான அறிவினா,அறியாவினா, ஐயவினா, கொடை வினா, கொளல் வினா , ஏவல் வினா வ பற்றிய விளக்கத்தை பற்றி தெளிவாக அறிந்து கொண்ட நிலையில் ,இன்றைய இலக்கணம் கற்பித்தல் பகுதியில் விடை வகைகள் ஆன சுட்டு விடை, மறைவிடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை பற்றிய விளக்கத்தையும் தெளிவாக கற்றுக் கொள்ளலாம்.)

               விடை வகை 



முன்னுரை:


        வினவப்படும் வினாவிற்கு ஏற்ப விடை அளிப்பது தான் மொழிநடையின் சிறப்பு .

         தேர்வு நாளை நடைபெறுமா? எனக் கேட்ட ஒருவனிடம் என் தங்கை ஏழாம் வகுப்பில் படிக்கிறாள் எனக் கூறுவது தவறு. வினாவும் விடையும் பிழை இன்றி அமைதலே முறை. 


வேறு பெயர்கள்:


       இறை,செப்பு, பதில் என்பன விடையின் வேறு பெயர்கள்.


விடை வகை:


       விடை எண் (எட்டு) வகைப்படும்.அவை , 


        1.சுட்டு விடை 


        2.மறை விடை 


        3. நேர் விடை 


        4.ஏவல்  விடை 


        5.வினா எதிர்

          வினாதல் விடை 


        6.உற்றது உரைத்தல்

            விடை


        7. உறுவது கூறல்

            விடை 


        8. இனமொழி விடை 


என்பன.


1.சுட்டு விடை :


        வினவும் வினாவிற்கு சுட்டி விடை அளிப்பது சுட்டு விடை ஆகும்.

(எ.கா)

      ★  தென்காசிக்குச்

            செல்லும் வழி யாது?

      ★  சென்னைக்கு வழி

              யாது ?

        என்ற வினாவிற்கு இது  என விடை அளிப்பது சுட்டு விடை ஆகும்.


 2.மறை விடை: 


          வினவும் வினாவிற்கு எதிர்மறை பொருளில் விடை இருப்பின் மறைவிடை எனப்படும்.

(எ.கா)

         ★  இது செய்வாயா ?

            என்ற வினாவிற்கு 'செய்யேன்' என  விடையளித்தால் அது மறைவிடை எனப்படும்.


  3. நேர் விடை :


      வினவும் வினாவிற்கு உடன்பாட்டு பொருளில் விடை அளித்தால் அது நேர்விடை  ஆகும்.

(எ.கா)

            நீ நாளை பள்ளி

                   செல்வாயா?

         இவ் வினாவிற்கு செய்வேன் என்று விடையளித்தால்  அது நேர்விடை ஆகும்.


4.ஏவல்  விடை :


         வினவப்படும் வினாவிற்கு வினவியவரையே ஏவுதல் ஏவல் விடை எனப்படும்.

(எ.கா)

        ★ அங்காடிக்கு

                       செல்வாயா? 

          இவ் வினாவிற்கு நீயே செல் என்று விடையளித்தால் (வினவியவரையே ஏவுவதால்) அது ஏவல் விடை ஆகும்.


5.வினா எதிர் வினாதல் விடை :


         வினவும் வினாவிற்கு விடையாக வினாவாகவே கூறுதல் வினா எதிர் வினாதல் விடை ஆகும்.

(எ.கா)

         ★ நீ தேர்வுக்குப் 

               படித்தாயா?

        இவ்வினாவிற்கு விடையாக படிக்காமல் இருப்பேனா? என்று வினவுவது வினா எதிர் வினாதல் விடை ஆகும்.


6.உற்றது உரைத்தல் விடை:


            வினவும் வினாவிற்கு தனக்கு உற்றதை விடையாக கூறுதல் உற்றது உரைத்தல் விடை  ஆகும்.

(எ.கா)

        நீ சொற்பொழிவு

               ஆற்றுவாயா ?

         இவ் வினாவிற்கு 'தொண்டை வலிக்கிறது' என்று தனக்கு நேர்ந்ததை கூறுவது உற்றது உரைத்தல் விடை ஆகும்.


7. உறுவது கூறல் விடை :


      வினவும் வினாவிற்குத் தனக்கு நிகழப்போவதை விடையாக கூறுவது உறுவது கூறல் விடை ஆகும்.

(எ.கா)

      ★   நீ    இதைச்

           சாப்பிடுவாயா ?

        என்ற வினாவிற்கு 'வயிறு வலிக்கும்' என்று கூறுதல் உறுவது கூறல் விடை ஆகும்.


8. இனமொழி விடை :


     வினவும் வினாவிற்கு இனமான வேரூன்றை விடையாக் கூறுவது இனமொழி விடை ஆகும்.

(எ.கா)

         ★ நீ பாடுவாயா?

          இவ்வினாவிற்கு 'ஆடுவேன்' எனக் கூறுதல் பாடலுக்கு இனமான ஆடலை குறிப்பிட்டமையால்  இனமொழி விடை ஆகும்.


 முடிவுரை:


         ★ சுட்டு, 

         ★ மறை,

         ★ நேர்.

         ஆகிய மூன்றும் வெளிப்படையாக விடையைக் கூறுவது ஆகும் .

     ★ஏவல் ,

     ★வினா எதிர் வினாதல்,

     ★உற்றது உரைத்தல்,

     ★உறுவது கூறல்,

     ★இனமொழி. 

      ஆகிய ஐந்தும் வினாக்களுக்கு உரிய விடையை குறிப்பால் உணர்த்துவன ஆகும்.


"சுட்டு மறைநேர் ஏவல்  

                                         வினாதல்

 உற்ற(து) உரைத்தல்

                            உறுவது கூறல் இனமொழி எனும் என

                         இறையுள் இறுதி

 நிலவிய ஐந்துமப்

         பொருண்மையின் நேர்ப"

                            (  நன்னூல் - 386 )

மீண்டும் 

           அடுத்த 

                        பதிவில்.........🙏


👆This Content Sponsored By👇


"This Content Sponsored by Genreviews.Online


Genreviews.online is One of the Review Portal Site


Website Link: https://genreviews.online/


Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"





   


Saturday, 9 November 2024

தமிழ் இலக்கணம் (முந்தைய பதிவில் தொகைநிலைத் தொடர்களின் வகைகள் பற்றிய விளக்கத்தை தெளிவாக அறிந்து கொண்ட நிலையில் ,இன்றைய இலக்கணம் கற்பித்தல் பகுதியில் வினா வகைகள் பற்றிய விளக்கத்தையும் தெளிவாக கற்றுக் கொள்ளலாம்.)

                   வினா வகை 


முன்னுரை :

           ★ என்ன ?

           ★ எப்படி ?

           ★ எதற்கு ?

           ★ எங்கு ?

           ★  ஏன் ?

      என வினாமேல் வினாவை கேட்டு விடை அறிய விரும்புகின்றவனே சிறந்த அறிவாளியாக ஆக முடியும் என்று சாக்ரடீசும், தந்தை பெரியாரும் கூறுவர். 

வினா வகை :

         வினா ஆறு வகைப்படும். அவை,

        1. அறிவினா 

        2. அறியா வினா 

        3. ஐய வினா 

        4. கொளல் வினா 

        5. கொடை வினா 

        6. ஏவல் வினா 


1. அறிவினா:

                தான் ஒரு பொருளை நன்கு அறிந்திருந்தும் அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்பதனை அறியும் பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா.

(எ.கா)

          ★ திருக்குறளை 

                இயற்றியவர் யார்? 

          ★ சிலப்பதிகாரத்தை

                இயற்றியவர் யார்? 

     என ஆசிரியர்  மாணவரிடம் வினவுகிறார்.

          விடையை ஆசிரியர் தாம் அறிந்திருந்தும் மாணவர் அறிந்துள்ளனரா என்று அறிய வினவப்பட்டதாகலின் அறிவினா ஆகும்.


2. அறியா வினா:

           தான் அறியாத ஒரு பொருளை அறிந்து கொள்வதற்காகப் பிறரிடம் வினவுவது அறியாவினா.

(எ.கா)

           ★ எட்டுத்தொகை நூல்களுள்

               புறம் பற்றியன எவை? 


           ★ ஐயா, இச்செய்யுளின்

                பொருள் யாது?


      என மாணவர் தான் அறியாத ஒன்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வினவுவது அறியா வினை ஆகும்.


3. ஐய வினா:

          தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒரு பொருள் குறித்து, ஐயத்தினைப் போக்கிக் கொள்வதற்காக வினவப்படும் வினா, ஐயவினா.

(எ.கா)

             ★அங்கே கிடப்பது பாம்போ?

                 கயிறோ?


             ★இதனைச் செய்தவர்

                    இராமனா?

                    இலக்குமணனா?


4. கொளல் வினா:

            தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு கடைக்காரரிடம் வினவும் வினா கொளல் வினா.

(எ.கா)

          ★ வணிகரே! பருப்பு

              உள்ளதா?

  என வணிகரிடம் வினவுதல்.

         பருப்பு இருப்பின் பெற்றுக் கொள்ளும் பொருட்டு கேட்கப்பட்டது ஆதலின் கொளல் வினா ஆகும்.


5. கொடை வினா :

          தான் ஒரு பொருளைக் கொடுப்பதற்காக, அப்பொருள் இருத்தலைப்பற்றி பிறரிடம் வினவுவது,கொடை வினா.

 (எ.கா)

            ★  மாணவர்களே!

                 உங்களுக்கு சீருடை

                 இல்லையோ?

             மாணவர்களுக்கு சீருடை கொடுக்கும் பொருட்டு கேட்கப்பட்டது ஆதலின் கொடை வினா ஆகும்.


6. ஏவல் வினா:

          ஒரு தொழிலைச் செய்யும்படி ஏவும் வினா ஏவல் வினா. 

(எ.கா)

            ★மனப்பாடச் செய்யுளைப்

                 படித்தாயா? 

            ★முருகா சாப்பிட்டாயா? 

            (இவை படி, சாப்பிடு என்று ஏவல் பொருளைத் தருகின்றன.) 


       அறிவு, அறியாமை, ஐயுறல்,

                            கொளல், கொடை,

       ஏவல் தரும் வினா ஆறும்

                                              இழுக்கார் 

                                                     - நன்னூல் 385

மீண்டும் 

       அடுத்த 

             பதிவில்,,.......🙏




புதிய ஆத்திச்சூடி ( பாரதியார்)

புதிய ஆத்திச்சூடி - பாரதியார் ******************************************   காப்பு  -  பரம்பொருள்  வாழ்த்து:          " ஆத்திசூடி இளம்பி...