Tuesday, 20 August 2024

தமிழ் இலக்கணம்(குற்றியலுகரம்)

குற்றியலுகரம் :

குற்றியலுகரம் என்றால் என்ன?    

        குறுமை+ இயல்+ உகரம்

                  = குற்றியலுகரம் 

 ★  குறுமை என்றால் குறுகிய என்பது பொருள்.

 ★   இயல் என்றால் ஓசை என்பது பொருள் 

 ★   உகரம் என்றால் உ என்னும் எழுத்து. 

 ★    எனவே, குறுகிய ஓசை உடைய உகரம் குற்றியலுகரம்  ஆகும்.

  ★     ஒவ்வொரு எழுத்துக்கும் ஒலிக்கின்ற கால அளவு உண்டு.

  குறில்   -   ஒரு மாத்திரை

 நெடில்   -    இரண்டு மாத்திரை

  மெய்      -     அரை மாத்திரை

    ★   என்னும் கால அளவில் தான் எழுத்துக்களை ஒலிக்க வேண்டும்.

    ★    உகரம் குறிலானதால் ஒரு மாத்திரை கால அளவில்தான் எழுத்துகளை ஒலிக்க வேண்டும்.

     ★   ஆனால், அஃது ஒரு மாத்திரை அளவு ஒலிக்காமல் சில சொற்களில் அரை மாத்திரை கால அளவே ஒலிக்கும். 

      ★ அவ்வாறு ஒலிப்பதைத்தான் குற்றியலுகரம் என இலக்கண நூலார் குறிப்பிட்டுள்ளனர். 

      ★  சில சொற்களுக்கு இறுதியில் ஆறு வல்லின மெய் எழுத்துக்கள் சேர்ந்து வரும்போது உகரம் அரை மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்.

          க் + உ  =  கு

          ச்  + உ  =  சு

          ட்  + உ  =  டு

          த் +  உ  =  து

          ப் +  உ  =  பு

         ற்  +  உ  = று

       ★  கு, சு,  டு,  து,  பு,  று என்னும் ஆறு வல்லின எழுத்துக்கள் தனி நெடிலைச் சார்ந்து வரும்போதும், பல எழுத்துக்களைச் சார்ந்து சொல்லின் இறுதியில் வரும்போதும் ஒரு மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும். அவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் எனப்படும்.

      ★   சொல்லின் ஈற்று அயல் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு அதனை ஆறு வகையாக பிரிப்பர்.அவை,

1. நெடில் தொடர் குற்றியலுகரம் 

(எ.கா)

           நாகு, காசு, ஆடு, மாது, கோபு, ஆறு

2. ஆய்தத் தொடர் குற்றியலுகரம்

(எ.கா)

         எஃகு, கஃசு, அஃது, இஃது 

3. உயிர்த்தொடர் குற்றியலுகரம்

(எ.கா)

           அரசு, அழகு, பண்பாடு,

           உனது, உருபு, பாலாறு, மரபு

4. வன்றொடர்க் குற்றியலுகரம்

(எ.கா)

           பாக்கு, பத்து, உப்பு, சுக்கு,

           தச்சு, பட்டு

5. மென்றொடர்க் குற்றியலுகரம்

(எ.கா)

          சங்கு, பஞ்சு, வண்டு, பந்து

6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

(எ.கா)

             செய்து, கொய்து, சார்பு,

             சால்பு,மூழ்கு, மார்பு.

குறிப்பு:

1. கு, சு,  டு,  து,  பு,  று என்பன வல்லின மெய்களின் மேல் உக்கரம் ஊர்ந்து வரும் எழுத்துக்கள். 

2. குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரை. 

3. ஈற்று அயல் எழுத்தாக தனி நெடில், ஆய்தம், உயிர்மெய், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப்பெற்று வரும்.

4. நெடில்தொடர்க் குற்றியலுகரம் மட்டுமே இரண்டு எழுத்துக்களை பெற்று வரும்.(எ.கா) ஆடு, மாடு, காது. 

          ஏனைய ஐவகை குற்றியலுகரச் சொற்கள் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்களை பெற்று வரும். (எ.கா) சுக்கு, பாலாறு,  காட்டாறு..........

"நெடிலோடு ஆய்தம் உயிர்வலி

                                          மெலிஇடைத்

தொடர்மொழி இறுதிவன்மையூ  ருகரம்

அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே."

                                        - நன்னூல்,94


        

மீண்டும் அடுத்த பதிவில்........






No comments:

Post a Comment

புதிய ஆத்திச்சூடி ( பாரதியார்)

புதிய ஆத்திச்சூடி - பாரதியார் ******************************************   காப்பு  -  பரம்பொருள்  வாழ்த்து:          " ஆத்திசூடி இளம்பி...